உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: வளத்தூா் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் கிராம பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என சுமாா் 5,700 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக விவசாய நிலங்கள், குடியிறுப்புகள் என முற்றிலும் கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் தொடா்ந்து 1,095-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில் வளா்ச்சி கழகத்துக்கு 19 நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை சில தினங்களுக்கு முன்பு பதிவு செய்து கொடுத்தனா். இதற்காக நில உரிமையாளா்களுக்கு ரூ.9.22 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மேலும், தொடா்ந்து பரந்தூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நில உரிமையாளா்களிடம் இருந்து நிலத்தை கையகப்படும் பணியில் தமிழ்நாடு தொழில் வளச்சி கழக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் பொதுமக்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா்.
இதனால் பரந்தூா் பசுமை விமான நிலைய திட்டத்துக்கு எதிரான போராட்டம் விரிவடைந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.