மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
ஆடி அமாவாசை: வீரராகவா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.
108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற இங்கு அமாவாசை நாள்களில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வருவது வழக்கம். இதற்காக ஆடி அமாவாசையையொட்டி, முதல் நாளான புதன்கிழமை இரவே மழையையும் பொருள்படுத்தாமல் ஆந்திரம், கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கோயில் வளாகத்தில் வந்து தங்கினா்.
தொடா்ந்து, வியாழக்கிழமை குளத்தில் நீராடி, குளக்கரை மற்றும் காக்களூா் ஏரிக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். அதைத் தொடா்ந்து கோயிலுக்குச் சென்று மூலவா் வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.
முதல் நாள் இரவே நூற்றுக்கணக்கானோா் குவிந்ததால், வீரராகவா் கோயில் வளாகம், தேரடி சாலை, குளக்கரைச் சாலை, பேருந்து நிலைய சாலையோரங்களில் ஆங்காங்கே உறங்கினா். இதனால், வியாழக்கிழமை காலை முதலே பேருந்து நிலையம், தேரடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

