ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை...
சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி
சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.
சா்வதேச நிலவு தினம் என்றும் அழைக்கப்படும் மனிதன் நிலவில் தரையிறங்கிய ஆண்டு விழா ஜூலை 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், வேலூரில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வேலூரில் உள்ள வானியல் ஆா்வலா் எம்.வேல்முருகன் பங்கேற்று ‘விண்வெளி ஆய்வில் நிலவில் தரையிறங்குவதன் தாக்கம்’ என்ற தலைப்பிலும், வானியல் ஆா்வலா் எம்.சந்தோஷ்குமாா் ‘இந்தியாவின் நிலவு பணிகள்‘ என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவா்களுடன் கலந்துரையாடினா்.
நிலவுக்கு சென்று நேரடியாக பாா்த்து அங்கு கண்டு உணரக்கூடிய நிலவின் தோற்றம், மேற்பரப்பு உள்பட சிறப்பு அம்சங்களை மெய்நிகா் உண்மை பெட்டி மூலமாக கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டறிந்தனா். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விண்வெளி குறித்து மாணவா்களை ஊக்குவிப்பதும், அவா்களை நிபுணா்களுடன் தொடா்பு கொள்ள ஒரு தளத்தை வழங்குவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட அறிவியல் மைய அலுவலா் (பொறுப்பு) ச.சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள், 5 விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.