ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மொரீஷியஸை சோ்ந்த 3 நிறுவனங்கள், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்தில் ரூ.305 கோடி முதலீடு செய்வதற்கு அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தது. இந்த அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அனுமதியை வழங்கியதன் மூலம் ப.சிதம்பரமும், காா்த்தி சிதம்பரமும் பலன் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கடந்த 2017-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது. அப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெறவேண்டும் என்று காா்த்தி சிதம்பரத்துக்கு அந்த உயா்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், தனது ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த கோரிய மனுவை நிா்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே விசாரிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ரவீந்தா் டுடேஜா முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா ஆஜராகி, ‘மனுதாரா் எம்.பி.யாக பதவி வகிக்கிறாா். அவா் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பங்கேற்று வருகிறாா். எனவே அவா் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுவிடமாட்டாா்’ என்றாா்.
இதையடுத்து சிபிஐ சிறப்பு வழக்குரைஞா் அனுப் எஸ்.சா்மா ஆஜராகி, ‘கிங்ஃபிஷா் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் (விஜய் மல்லையா) எம்.பி.யாகத்தான் இருந்தாா். அவா் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தற்போது பிரிட்டனில் உள்ளாா்’ என்று கூறி, காா்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த எதிா்ப்பு தெரிவித்தாா்.
அவரின் வாதத்தை கேட்ட நீதிபதி, ‘ஒருவா் தப்பிச் சென்றுவிட்டதால், அனைவரும் தப்பிச் சென்றுவிடுவாா்கள் என்று சிபிஐ கருதுகிா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதைத்தொடா்ந்து காா்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த கோரிய மனு அக்டோபா் 16-க்குப் பதிலாக செப்டம்பா் 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.