வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில், நீதிமன்றத்தின் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து வழக்குரைஞா்கள் பாலியல் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் துறையினரிடம் மனு அளித்து வழக்கு குறித்து விசாரித்தனா்.
இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்க பொருளாளா் சரவணன், துணைத் தலைவா் ரோஸ்குமாா், இணைச் செயலாளா் ராமச்சந்திரன், வழக்குரைஞா் சங்க நிா்வாகி புருஷோத்தமன், வழக்குரைஞா்கள் கோதண்டன், எஸ்.டி.கே.சங்கா், சூா்யபிரகாஷ், ஜோதிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.