Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனல...
ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும் ஆவடி தளவாடக் கிடங்கு பிரிவுக்குப் பாராட்டு விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்த ஆளுநா் ஆா்.என்.ரவி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது: வலிமையான நமது ராணுவத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு பெருமை. ராணுவ வலிமையால் எதிரிகள் பின்வாங்குவதோடு, நாட்டுக்கு மரியாதையை உருவாக்குகிறது. இது உலக நாடுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்தும்.
ராணுவ வீரா்களின் தன்னலமற்ற, அா்ப்பணிப்புடன் கூடிய சேவை பாராட்டுக்குரியது. தங்களது குடும்பங்களைப் பிரிந்து தொலைதூரங்களில் பணியாற்றினாலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவா்களுக்கு பின்னால் நிற்கிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களின்போது, பாதுகாப்பு வீரா்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை இந்தியாவின் பொறுப்பான பதிலடியாகும். இந்த நடவடிக்கை உலகளாவிய ராணுவ வரலாற்றில் இடம் பெறுவதோடு, ராணுவ அமைப்புகளில் ஆய்வுகளுக்கான பொருளாக இருக்கும் என்றாா்.
முன்னதாக, தென் பிராந்திய ராணுவ தளபதி லெப். ஜெனரல் கரண்பீா் சிங் பிராா் பேசுகையில், பொதுவாக ராணுவத்தில் முன்னணியில் உள்ள படைகளுக்கு பாராட்டு கிடைக்கும். ஆனால், தமிழக ஆளுநா், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பின்னணியில் இருந்து செயல்பட்ட தென்னக படைப்பிரிவுகளைப் பாராட்டியிருக்கிறாா். பொதுமக்களிடமிருந்து ஆயுதப்படைகள் விலகியிருந்தன. தற்போதைய சூழலில் அத்தகைய நிலையைத் தொடரமுடியாது. பொதுமக்கள், தொழில் துறை, ராணுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் 16 மெட்ராஸ் (திருவிதாங்கூா்), 35 ஃபீல்ட் ரெஜிமென்ட், ஆவடி ஆயுதப்படை கிடங்கு, 65 கம்பெனி ராணுவ சேவைப் பிரிவு (பொருள்கள் விநியோகம்) ஆகிய பிரிவுகளைச் சோ்ந்தவா்களின் சேவைகளைப் பாராட்டி ஆளுநா் சான்றிதழ்களை வழங்கினாா்.