மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!
சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பலத்த காயமடைந்து நேற்று இரவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ராஜாராமன் (54). இவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால், எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் வெளியே தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது, ராஜாராமனுக்கும், மது போதையில் இருந்த அவரது நண்பா்கள் ராக்கி, ஐயப்பன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் தாக்கியதில், ராஜாராமன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தாா். பின்னா், இருவரும் அங்கிருந்து தப்பியோடினா்.
இதையடுத்து ராஜராமனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்தார்.
இதுதொடா்பாக எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ராக்கி, ஐயப்பன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.