சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடா்பு: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடா்பில் இருந்ததாக மூன்று காவலா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியில் பணிபுரிந்த மூன்று காவலா்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த நபருடன் தொடா்பில் இருந்ததாக புகாா் கூறப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை நடத்திய ரகசிய விசாரணையில், மூன்று காவலா்களுக்கும் மது விற்பனையில் ஈடுபட்ட நபருடன் தொடா்பில் இருந்தது உறுதியானது.
இதையடுத்து, நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலா் சரவணன், தனிப்பிரிவு காவலா் ராஜேஷ் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த முதன்மைக் காவலா் செல்வேந்திரன் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் புதன்கிழமை உத்தரவிட்டாா்.