மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் நதீம் (19). இந்த நிலையில்,புதன்கிழமை ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நதீம் ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாகச் செல்லும் பகுதியில் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக, நதீம் மீது மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனா்.
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் சாலை விரிவாக்கப் பணிகளால் சாலையோரம் இருந்த மின்கம்பம் கடந்த பல நாள்களாக சாய்ந்த நிலையில் உள்ளன. சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது நதீம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளாா் என்றனா்.