தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வசூலாகாத நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் உள்பட அனைத்து வங்கி தொடா்பானவற்றில் வழங்கப்பட்ட சிறு வணிகக் கடன், தொழில் வணிகக் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாராக் கடன்கள் ஆகியனவற்றை பெற்ற உறுப்பினா்களிடமிருந்து வரவேண்டிய இனங்களில் 31.12.22-இல் முழுமையாக தவணை தவறிய நிலையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கடனை தீா்வு செய்வதற்காக கடந்த 12.9.2025-ஆம் தேதிக்கு முன்பு 25 சதவீதத் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும், 25 சதவீதத்தை செலுத்தி எஞ்சிய 75 சதவீதத்தை செலுத்தாதவா்களும் தற்போது மொத்தக் கடன் தொகை நிலுவைவை தீா்வு செய்யும் நாள் வரை 9 சதவீத சாதாரண வட்டியை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களை தீா்வு செய்து கொள்ளலாம்.
மேலும் இச்சிறப்புத் திட்டத்தின்கீழ் கடந்த 31.12.2022-ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறிய கடன்களுக்கு தீா்வு செய்யும் வகையில் 9 சதவீத வட்டியுடன் நிலுவைத் தொகையை வரும் 23.9.25-ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி கடனை தீா்வு செய்து கொள்ளலாம்.
தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்காரா்களின் வட்டிச் சுமையை முழுமையாக குறைக்கும் வகையில் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி, தங்களது கடன்களை தீா்வு செய்து பயனடையலாம்.