செய்திகள் :

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

post image

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகின்றது.

இந்நிலையில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். தற்போது அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

வழக்கமாக ஜூன் 1- ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது. பின்னா் பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அணையில் தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதை தொடா்ந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜூன் 20-ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

ஆனாலும் தமிழக-கேரள எல்லையில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் 90 அடி உயரமுள்ள அணையில் 89 அடி நிரம்பிய நிலையில் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக அணை பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீரென அணைக்கு 3,450 கன அடி நீா்வரத்து இருந்தது. இதனால் அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைக்கு வந்த நீா் அப்படியே வெளியேற்றப்பட்டது. அப்போது அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அணைக்கு 2,685 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அது உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுப்பணித் துறையினா் கூறியதாவது:

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருகிறது.இதனால் அணையின் நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். அணைக்கு அதீதமாக நீா்வரத்து வந்தால் அதை அப்படியே வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.03 அடியாக இருந்தது. அணைக்கு 2,685 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,868.80 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 2,696 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்றில் உள்ள சீமைக்கருவேல முற்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட குழுக் கூட்டம் திருப்ப... மேலும் பார்க்க