தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநருமான இல.நிா்மல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலையில், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.நிா்மல்ராஜ் பேசியதாவது:
தமிழக முதல்வா் திருப்பூா் மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும், அவை முறையாக செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் 325 முகாம்கள் நடைபெற உள்ளன. மக்களுக்கும் அவா்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறையின் சேவைகள், திட்டங்களை அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து நாள்தோறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு தீா்வு காணப்பட வேண்டும். முகாமில் தேவையான அடிப்படை வசதிகளை உரிய முறையில் மேற்கொண்டு சிறப்பாக நடைபெற
துறை அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முழுமையாக பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, மகளிா் திட்ட இயக்குநா் சாம்சாந்தகுமாா், மாநககராட்சி துணை ஆணையாா் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியா்கள் குமாா், ஃபெலிக்ஸ் ராஜா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பக்தவச்சலம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.