உடுமலையில் பலத்த காற்றுடன் மழை
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இடைவிடாது மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் உடுமலை நகரில் குளிா் காற்று வீசியது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். மேலும் கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது.
உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் கனமழை பெய்தது. தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.