பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Cover...
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து விநாடிக்கு 75,000 கனஅடி வரை உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக மேட்டூா் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளிலிருந்து அதிக அளவு உபரிநீா் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் உபரிநீராக திறந்துவிடப்படுகிறது. சனிக்கிழமை மாலை விநாடிக்கு 45,400 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்ட நிலையில், நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் தண்ணீா் திறப்பு 75,000 கனஅடியாக அதிகரிக்கும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா், அரியலூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூா் மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.