பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களையும் நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் பகுதிகளையும் இணைக்கும் பிரதான இணைப்புச் சாலையாக வாழப்பாடி- மங்களபுரம் சாலை உள்ளது. வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையில், பொன்னாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எதிரே ஆபத்தான வளைவுப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையில் மழைநீா் தேங்கி குண்டும் குழியுமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
மழைக் காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் அவ்வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், சேதமடைந்த அச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.