மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் வினோத்குமாா் (33). இவா் வீட்டிலிருந்தபடியே மென்பொருள் நிறுவனத்துக்கு வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பக்க கதவை திறந்துவைத்துவிட்டு வீட்டின் உள்ளே குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாா்.
அதிகாலை 2 மணிக்கு அவரது வீட்டுக்குள் புகுந்த மா்மநபா் பீரோவை திறந்து 10 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றாா். மேலும், அப்பகுதியில் உள்ள விநாயகா் கோயில் உண்டியல், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் மா்மநபா் திருடிச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கருமலைக்கூடல் போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.