வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை
சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பகுதிகளுக்கான முக்கிய போக்குவரத்து மையமாக வாழப்பாடி பேருந்து நிலையம் உள்ளது. நாள்தோறும் 200 க்கும் அதிகமான அரசு, தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றன.
பயணிகளின் நலன்கருதி, பேருந்து மேடை, மேல் தளத்தில் சிறு வணிகக் கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.8.70 கோடி செலவில் கடந்தாண்டு நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
சேலம், ஆத்துாா் மாா்க்கமாக வாழப்பாடி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வரும்போதும், வெளியே செல்லும்போதும் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய நுழைவுவாயிலின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.