ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. காஸாவுக்கு நட்பு நாடுகள் கொடுக்கும் மனிதாபிமான உதவிகளை எல்லைப் பகுதிகளிலேயே இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.
இதனால், காஸாவிலுள்ள மக்களுக்கு போதிய உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அடிப்படை பொருள்கள் சென்று சேர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனம் மட்டுமே காஸாவில் தற்போது உணவுகளை வழங்கி வருகிறது.
இதனிடையே, காஸாவில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால் குடிமக்கள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஸாவில் பணிபுரிந்துவரும் புகைப்பட பத்திரிகையாளர் முகம்மது அபு வோன் லிங்க்டுஇன் சமூக வலைதளப் பக்கத்தில் உணவுக்காக தனது புகைப்படக் கருவியையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் காஸாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது உபகரணங்களையும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ், ஏபிசி நீயூஸ் என சர்வதேச ஊடகங்கள் பலவற்றுக்கு பணியாற்றியுள்ள முகம்மது இவ்வாறு பதிவிட்டுள்ளது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
காஸாவில் கடும் பஞ்சம் நிலவுவதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் பல சுட்டிக்காட்டியுள்ளன.
உலக உணவுத் திட்ட அமைப்பு தரவுகளின்படி, காஸாவில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதில்லை எனத் தெரிகிறது. காஸாவில் கிட்டத்தட்ட 4,70,000 மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கித்தவிப்பதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
எனினும், காஸா எல்லையில் மனிதாபிமான உதவிகளைக் கொண்டுவந்துள்ள நூற்றுக்கணக்கான வானங்கள் அணிவகுத்து நிற்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்லது.
அந்த வாகனங்களை உள்ளே கொண்டு செல்வதிலும், ஒருங்கிணைப்பதிலும் பெரிய சிக்கல் நிலவுவதாக மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.