173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பயணிகள் பாதுகாப்பாக வெளியேறும் விடியோ!
அமெரிக்காவின் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விபரீதம் தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் 173 பயணிகள் 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சிலருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்திற்குட்பட்ட டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. 173 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், புறப்பட்ட சிறுது நேரத்தில் டயரில் தீ விபத்து நேரிட்டு பெரும் புகை சூழ்ந்தது.
இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். லேன்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எங்கள் விமான பராமரிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் சேவையில் இருந்து அந்த விமானம் நீக்கப்பட்டுள்ளது என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
விமானப் பணிக் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான விடியோவில், புகை சூழ்ந்த விமானத்தில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக பத்திரகா அவசர வெளியேற்றம் வழியாக அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இதையும் படிக்க | போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்: டிரம்ப்
American Airlines Plane Tyre Catches Fire At Denver Airport, Passengers Evacuated | Video