ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு
ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை(ஜூலை 23) மாலை தொடங்கியது.
இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா் நடைபெற்ற விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
நிறைவு நாள் விழாவில் இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் இளையராஜா இசைத்த ஓம் சிவோஹம் பாடலால் பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர். விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்ஃபனியையும் இளையராஜா இசைத்தார்.
சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!
மேடையில் இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரசித்துக் கேட்டார். மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், தொல். திருமாவளவன் எம்.பி. , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.