பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனு குறித்து முதல்வர் ஸ்டாலின்!
மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வா், அங்கிருந்தபடி அரசு மற்றும் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இதனிடையே, இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் மோடியிடம் மாநில நலன் சாா்ந்த திட்டங்கள் தொடா்பான கோரிக்கை கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலா் முருகானந்தம், முதல்வரின் செயலா்கள் உமாநாத், எம்.எஸ்.சண்முகம் ஆகியோா் பங்கேற்றதாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் மனுவை வழங்குவார். இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!
இந்த நியில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவினை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.