கர்ஜிக்கும் சிங்கம்... டிம் டேவிட் பாணியில் கொண்டாடிய ஆஸி. வீரர்கள்!
"இந்தியர்களின் ரத்தத்தில் லாபம் பார்க்காதீர்" - Ind vs Pak ஆசிய கோப்பை போட்டிக்கு எம்.பி எதிர்ப்பு
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இனி இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
அந்த சம்பவத்தின்போதே, BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "ஐ.சி.சி தொடர்கள் என்று வரும்போது மட்டும், ஐ.சி.சி-யால்தான் நாங்கள் அவர்களுடன் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பதை ஐ.சி.சி-யும் அறிந்திருக்கிறது" என்று பாகிஸ்தானுடன் விருப்பமில்லாமல்தான் விளையாடுகிறோம் மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் World Championship of Legends டி20 தொடரில்கூட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதனால், செப்டம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானும் இருப்பதால் இந்தியா விளையாடுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது அல்லது தொடரிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
இத்தகைய சூழலில் ஆசிய கோப்பை போட்டி அட்டவணை நேற்று வெளியானது.
அதில், குரூப் A-ல் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும், குரூப் B-ல் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும், செப்டம்பர் 14-ம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் விளையாட வேண்டும் என்று இரு அணிகளையும் ஒரே குழுவில் இடம்பெறும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

அந்த வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, "கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடனான எந்தவொரு போட்டியையும் நீங்கள் எந்த நாட்டிற்கு மாற்றினாலும், இந்தியர்களான நாங்கள் அனைவரும் அதனை எதிர்ப்போம் என்பதை பிசிசிஐ நினைவில் கொள்ளவேண்டும்.
இந்திய மக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் ரத்தத்திலிருந்து உங்களின் லாபத்தை நிறுத்துங்கள்.
ஒருபக்கம், நம் பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி ( Chief of Defence Staff) அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.
மறுபக்கம், ரத்தத்தில் லாபம் பார்க்க நினைக்கிறீர்கள் நீங்கள்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.