போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்: டிரம்ப்
தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மூன்று நாள்களாக மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில், தற்போது இருவரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான மோதல், அமெரிக்கா உடனான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் குறித்து ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது,
''இருதரப்பு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்தையும், அமைதியையும் எதிர்நோக்கியுள்ளன. இரு நாடுகளுடனும் அமெரிக்கா வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதனால், இரு நாடுகளும் தொடர்ந்து மோதிக்கொண்டு இருந்தால், அவற்றுடன் எந்தவொரு ஒப்பந்தங்களும் மேற்கொள்ள விருப்பம் இல்லை. இதனை அவர்களிடம் தெரிவித்தேன். தாய்லாந்து பிரதமரிடம் இது குறித்து தொலைபேசியில் உடனடியாகப் பேசினேன்.
எண்ணற்ற மக்கள் இந்த போரில் கொல்லப்படுகின்றனர். இது வெற்றிகரமான போர் நிறுத்தமாகக் கருதப்படும், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நினைவூட்டுகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாகக் கூற வேண்டாம் என டிரம்ப்பிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பிறகும், தொடர்ந்து பொதுவெளிகளில் டிரம்ப் இவ்வாறு கூறி வருகிறார்.
தற்போது தாய்லாந்து - கம்போடியா இடையிலான போர் நிறுத்தத்தின்போதும் இந்தியா - பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அமெரிக்கா தரையை நோக்கிப் பாய்ந்த விமானம்