செய்திகள் :

சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

post image

மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறார். அவையின் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

மாலை நாலு, நாலரை மணி வரையிலும் வழக்கமான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒருநாள் கழித்து, 23 ஆம் தேதி புதன்கிழமை, ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் செல்லப் போகிறார் என மாலை 3.53-க்கு செய்தித் தொடர்புத் துறையின் அறிவிப்புகூட வெளியாகிறது.

நீதிபதிகள் சேகர் யாதவ், யஷ்வந்த் வர்மா ஆகியோருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் தானும் பேசப் போவதாக மாலை 4 மணிவாக்கில் எதிர்க்கட்சி எம்.பி.யொருவரிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அடுத்த 5 மணி நேரத்தில், ‘உடல்நலன் கருதியும் மருத்துவ ஆலோசனைப்படியும்’ உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவதாகக் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் அறிவிக்கிறார் - குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

நாட்டின் இரண்டாவது குடிமகன் என்ற தகுதிநிலையிலுள்ள ஒரு பதவியிலிருந்து திடீரென ஒருவர் விலகுவதற்குப் போயும் போயும் உடல்நலப் பிரச்சினைதானா காரணமாக இருக்க முடியும்? செய்தி வெளியான அந்த நொடியில் தொடங்கிய ஊகங்களுக்கும் சந்தேகங்களுக்கும் இன்னமும் யாருக்கும் விடை தெரியவில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்தான். நைனிதாலில் ஜூன் 25 ஆம் தேதி பேசிக்கொண்டிருந்தபோதே மயக்கமுற்றார். ஆனால், அவருடைய செயற்பாடுகளில் எங்கேயும் எதுவும் – எந்தவித உடல்நலக் குறைவுக்கான அறிகுறிகள் – தென்பட்டதில்லை என்கிறார்கள். திடீரென அவர் பதவி விலகிய நாளில்கூட, வழக்கமான உற்சாகத்துடன்தான் மாநிலங்களவையை நடத்தியுள்ளார்; சார்ந்த அனைத்துக் கூட்டங்களிலும் பங்குகொண்டிருக்கிறார்.

என்றபோதிலும், அன்றைய தினம் அலுவலகத்திலிருந்து குடியரசுத் துணைத் தலைவராகப் புறப்பட்டுச் சென்றவர், மீண்டும் மறுநாள் அலுவலகத்துக்கே திரும்பி வர முடியாத நிலையேற்பட்டுவிட்டது (தன்னுடைய தனிப்பட்ட ஆவணங்களையேனும் எடுத்துச் சென்றிருப்பாரா எனத் தெரியவில்லை).

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது தேர்தலில் வென்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்காகவோதான் இதுவரையிலும் குடியரசுத் துணைத் தலைவர்கள் பதவி விலகியிருக்கின்றனர் – உடல்நலம் கருதி மட்டுமல்ல, வேறு எதற்காகவும் யாரும் பதவி விலகியதில்லை.

கூட்டத்தொடரின் முதல் நாளில் (அதாவது, அவருடைய கடைசி வேலை நாளில்!) எதிர்க்கட்சிகள் அளித்த (!), உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத் தீர்மானத்தை – மக்களவையில் அனுமதித்த அதே நாளில் – மாநிலங்களவையிலும் அனுமதித்தார் (அட்மிட்டட் அல்லது சப்மிட்டட் என்றும் விவாதம்).

இவ்வாறு அனுமதித்ததன் பேரில் பா.ஜ.க. மேலிடம் கொண்ட அதிருப்தி காரணமாகத்தான் தன்கர் ‘விலக நேரிட்டதாக’ச் செய்திகள் வெளியாகின்றன. தவிர, நீதிபதி யஷ்வந்த் வர்மா தீர்மானத்துடன் வெறுப்புப் பேச்சுக்காக நீதிபதி சேகர் யாதவுக்கு எதிரான தீர்மானத்தையும் தாமாகவே அனுமதித்ததன் காரணமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதில் ஏதோ வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகக் கூறப்பட்டாலும்கூட பதவியிலிருந்தே ராஜிநாமா செய்யக் கூடிய ஒன்றாக இருக்க முடியுமா? இருக்கலாம் என்கிறது காங்கிரஸ்.

அல்லாமல், முதல் நாள் அவையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பாதுகாப்புக் குறைபாடுகள், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமரசம் பேசி முடித்ததாக அடிக்கடி கூறிவருவது பற்றியெல்லாம் நீண்ட நேரம் உரையாற்ற, முன்னெப்போதுமில்லாத வகையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை அனுமதித்தார். முடிவில், இவ்விஷயத்தில் முழுமையான விவாதத்தை நிச்சயம் அனுமதிப்பதாகவும் உறுதியளித்தார் தன்கர்.

திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு சிறிது நேரமே நடந்த அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவும்  நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜுவும் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு நடந்த கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். இதனால் பெரிதும் கோபமுற்றதாகக் கூறப்படும் தன்கர், கூட்டத்தை மறுநாள் பகல் 1 மணிக்கு ஒத்திவைத்திருக்கிறார் (ஆக, அதுவரையிலும்கூட ராஜிநாமா பற்றி அவர் கோடிடக்கூட இல்லை!).

அவர் ராஜிநாமா செய்யப் போகிறார் என்பதற்கான எந்தவித அறிகுறிகளும் திங்கள்கிழமை தெரியவில்லை என்றுதான் எம்.பி.க்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

நட்டாவும் ரிஜுஜுவும் மாலைக் கூட்டத்துக்கு வராத அளவுக்கு, பகல் 1 மணியிலிருந்து 4.30 மணிக்குள் ஏதோ நடந்திருக்க வேண்டும்; தன்கர் விலகலுக்கு ஏதோ வலுவான காரணம் இருக்கிறது என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ். ஆனால், ‘சே, சே, நாங்கள் கூட்டத்துக்கு வரவில்லை என்று ஏற்கெனவே அவரிடம் சொல்லிவிட்டோம்’ என்று நட்டாவும் ரிஜுஜுவும் மறுத்திருக்கின்றனர்.

சந்திப்பு பற்றி முன்னதாக உறுதி செய்துகொள்ளாமலும் எவ்விதத் தகவலும் தெரிவிக்காமலும்தான் திங்கள்கிழமை இரவு 9 மணிக்குக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் ஜகதீப் தன்கர். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை அளித்த ஜகதீப் தன்கர், இரவு 9.25 மணிக்கு எக்ஸ் தளத்தில் தகவலைப் பகிர்ந்தார்.

என்ன கொடுமையென்றால், ஊடகங்களில்தான் ராஜிநாமா செய்தி பரபரப்பானதே தவிர, ஆளும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி அந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூட ஏனோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

‘குடியரசுத் துணைத் தலைவர் பதவி உள்பட பல்வேறு நிலைகளில் இந்த நாட்டுக்குப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் ஜகதீப் ஜன்கர். உடல் நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்’ – அவ்வளவுதான் பிரதமர் நரேந்திர மோடியின் ரியாக்.ஷன், அதுவும் எக்ஸ் தளப் பக்கத்தில். குடியரசுத் துணைத் தலைவராக எவ்வளவு சிறப்பாக தன்கர்  பணியாற்றியிருக்கிறார் என்பதாகக்கூட ஒரு வரி சுட்டிக்காட்டவில்லை! இத்தனைக்கும் தன்கரை வேட்பாளராக அறிவித்தபோது, ‘கிஷான்புத்ர’ – விவசாயி  மகன் – என அறிமுகப்படுத்தியவர்தான் மோடி.

‘ஐயோ பாவம், இவ்வளவு நல்லவருக்கு இப்படி நேர்ந்துவிட்டதே?’ என்று யாரேனும் துயருறுவார்களா என்றால் வாய்ப்பில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஜகதீப் தன்கர், ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்திலும் பணியாற்றியவர். அதனால்தானோ என்னவோ, நீதித் துறையைப் பற்றி மிக அதிகமாகவே, அதுவும் ஒரு குடியரசுத் துணைத் தலைவராக இருந்துகொண்டு, விமர்சித்தார் - சர்ச்சைக்குரிய வகையிலும் அதிரடியாகவும் கருத்துகளைத் தெரிவித்துவந்தார்.

அரசியல் சாசனத்தின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’, `சோசலிச’ ஆகிய சொற்கள்  சேர்க்கப்பட்டது பற்றிக் கேள்வியெழுப்பி அதிரடித்தவர் ஜகதீப் தன்கர்.

நீதித் துறை தொடர்பாக நேரடியாகப் பல விஷயங்களில் கண்டனங்களைச் செய்தார். அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவை உச்ச நீதிமன்றம் பயன்படுத்துவதென்பது ஜனநாயக சக்திகளின் மீதான அணுகுண்டுத் தாக்குதல் – என்றது உள்பட (இந்தப் பிரிவின் கீழ்தான் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருந்த, மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட முன்வரைவுகளுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியது).

நீதிபதிகள் விஷயத்திலும் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விஷயத்தில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டியதுதானே? எதற்காக நீதிபதிகளை இவ்வாறு ‘விசாரணைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்களாக’க் காப்பாற்ற வேண்டும்? என்றெல்லாம் குரல் எழுப்பினார்.

எப்போது என்ன பேசுவாரோ என்று அச்சமுறும் அளவுக்குப் பேசினார். குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்ற பின் இவர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லாம். ‘உயரிய இடத்தில் இருந்துகொண்டு’ எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொன்னார், இவையெல்லாம் தன்கருடைய தனிப்பட்ட கருத்தா? அல்லது ஆளும் அரசின் கருத்தா? என்று வியக்கும் அளவுக்கு. ஏற்கெனவே இருந்த குடியரசுத் துணைத் தலைவர்கள் எப்படிச் செயல்பட்டார்கள் என்றெல்லாம் நினைத்திருப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால், அரசும் ஆளுங்கட்சித் தலைவர்களும் ஜகதீப் தன்கருடைய அதிரடியான பேச்சுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக ரசித்துக்கொண்டிருந்ததாகத்தான் தோன்றியது.

ஆனால், நீதித் துறை பற்றிப் பேசுவதெல்லாம் புதிதல்ல. சட்டத் துறை அமைச்சராக கிரண் ரிஜுஜு இருந்தபோது, நீதிமன்ற அதிகாரங்கள் பற்றி எவ்வளவோ மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார். இப்போதும் சில பாரதிய ஜனதா தலைவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ராஜிநாமாவுக்கு இதுவே காரணமாக இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் இவ்வளவு காலம் கழிந்த பிறகா?

ஜகதீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவர் மட்டுமல்ல, குடியரசுத் துணைத் தலைவரும்கூட. எனவே, இரு தரப்பினருக்கும் இணக்கமானவராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவையில் பெரும்பாலும் ஆளுங்கூட்டணிக்கு ஆதரவானவராகவே, சில நேரங்களில் ஆளுங்கட்சிக்காரரைப் போன்றேகூட – நடந்துகொண்டார் என்பார்கள்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என எப்போதும் எதிர்க்கட்சியினர் இவரைக் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றனர். அனேகமாக மாநிலங்களவைத் தலைவர் ஒருவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது இவரை எதிர்த்து மட்டும்தான். மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோதுகூட முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம்தான்.

குடியரசுத் துணைத் தலைவர் / மாநிலங்களவைத் தலைவர் பதவியேற்ற பிறகு நாலே நாலு முறைதான் வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார் ஜகதீப் தன்கர். இவற்றிலும் இரண்டு குட்டி நாடுகள், கம்போடியா, கத்தார்; ஒன்றிரண்டு நாள்கள்தான். பிரிட்டன், பிறகு அதிபர் இப்ராஹிம் ரெய்ஸியின் மறைவுக்காக ஈரானுக்கு! அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வந்தபோது நாட்டின் குடியரசுத் துணைத் தலைவரைச் சந்திக்கவே இல்லை! என்பன போன்ற சில கசப்புகளும் இப்போது நினைவுகூறப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும், நாட்டின் மிக உயரிய பதவிகளில் ஒன்றில் இருந்த ஒருவர் திடீரெனப் பதவி விலகியிருக்கிறார். அண்மைக் காலத்தில் மட்டுமல்ல, எப்போதுமே இந்த லெவலில் இப்படி யாரும் வெளியேறியதில்லை.

2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தம் பதவிக் காலம் முடியும்முன்பே ராஜிநாமா செய்தார். 2020-ல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கக் கூடிய நிலையில் தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா திடீரென பதவி விலகினார். தொடர்ந்து, இதேபோல, 2024 மார்ச்சில் தேர்தல் ஆணையர் அருண் கோயலும் - மறுநாள் காஷ்மீர் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் - திடீரென ராஜிநாமா செய்தார். கடைசி வரையிலும் இவர்களுடைய ராஜிநாமாவுக்கான காரணங்கள் தெரியாமலேயே போய்விட்டன. மிக உயர் பதவிகள் என்றாலும் உள்ளபடியே இவர்கள் அனைவரும் அரசு அலுவலர்கள்தான்; மக்கள் பிரதிநிதிகள் அல்லர். எப்போது வேண்டுமானாலும் பதவியை விட்டு இவர்கள் வெளியேறலாம்; யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால், இப்போதைய இந்த திடீர் ராஜிநாமா காட்சியோ அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறது.

திடீரென ‘பேப்பர் போட்டுவிட்டுப்’ புறப்பட்டுச் செல்ல தன்கர் ஒன்றும் ஏதோவொரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை. மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இரண்டாவது உயர் பதவிக்கு - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களால் வாக்களித்துத் -  தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு மட்டுமல்ல, அவரைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்தவர்களுக்கும் சேர்த்தே இருக்கிறது. எதிர்வரும் காலத்தில் குடியரசுத் தலைவராகவும் வாய்ப்புள்ள ஒருவர் இவ்வாறு ‘சட்டென’ விலகி வெளியேறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை.

2022, ஆக. 11-ல் பதவியேற்ற தன்கரின் பதவிக் காலம் முடிய முழுதாக இன்னும் இரு ஆண்டுகள் இருக்கின்றன. சிகிச்சைக்குப் பிறகும் அவர் நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார். நாட்டின் சாதாரண மக்களுக்குக்கூடத் தோன்றுகிறது, நிச்சயம் இந்த ராஜிநாமாவுக்கு உடல் நலக் குறைவு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்று. ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதால்தான் அவர் விலகியதாகத் தகவல்கள் பரவுகின்றன. பதவி விலகல் பற்றி அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. நிச்சயம் இந்த வெளியேற்றம், அன்செரிமோனியல்தான் (மதிப்புக்குறைவான வகையிலானதுதான்) என்பதில் ஜகதீப் கன்வருக்கேகூட மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றுதான் மக்களுக்குத் தோன்றுகிறது.

இறுக்கமான இந்த நிலையில், எத்தகைய சூழலில் தன்கரின் இந்தப் பதவி விலகல் நேரிட்டது என்பதை மத்திய அரசு விளக்க முன்வரலாம். முறையான விளக்கத்தை வெளியிடுவதே நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதுடன், நாடு முழுவதுமாகப் பரவிக் கிடக்கும் தேவையற்ற ஊகங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும்.

எத்தகைய நெருக்குதல்களுக்கு மத்தியில், யார் யாருடைய நெருக்குதல்களுக்கு இடையே உயர் நிலையிலுள்ள இவர்கள் எல்லாரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தக் கேள்வியும் ஐயமும் நாட்டின் அதிஉயர் பதவியான குடியரசுத் தலைவர் பொறுப்புக்கும்கூட பொருந்தக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும்.

தன்கருடைய பதவி விலகலுக்கு அவரை இந்தப் பதவிக்குக் கொண்டுவந்தவர்களே காரணமாக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், நிறைய கதைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய பதவிப் பொறுப்பு, இதற்கென ஒரு மதிப்பு, மரியாதை இருக்கிறது. மலினப்பட்டுவிடக் கூடாதுதானே.

நிச்சயம் உண்மையான காரணம் ஜகதீப் தன்கருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தன்கரே முன்வந்து பதவி விலகலுக்கான உண்மையான காரணத்தை விளக்காவிட்டால், கடைசி வரையிலும் பொதுவெளியில் யாருக்கும் எதுவுமே தெரியாமலேயே புதைந்துபோய்விடக் கூடும் (20, 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகக் கூடிய ஜகதீப் தன்கரின் நாள்குறிப்புப் பக்கங்களிலிருந்து ஒருவேளை வெளிப்படலாம், அதனால் அப்போது ஒரு பயனும் விளையப் போவதில்லை!). இவ்வாறெல்லாம் நேர்வது நிச்சயம் நல்லதும் அல்ல; நல்லதுக்கும் அல்ல, நாட்டிற்கு. எனவே, நீங்களாவது முன்வந்து மக்களிடம் வெளிப்படையாகச் சொல்லுங்கள் தன்கர்ஜி!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

On the sudden resignation of Vice President Jagdeep Dhankhar and the puzzles that remain....

சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்குபெறுவீர்களா? – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தக் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த பதில் –... மேலும் பார்க்க

தமிழக சிறைகளில் விரைவில் "டாமினன்ட்' கோபுரங்கள்!கைதிகளின் கைப்பேசி ராஜ்ஜியத்தை ஒழிக்க நடவடிக்கை

தமிழக சிறைகளில் கைப்பேசி சிக்னல்களை முற்றிலுமாக முடக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் "டாமினன்ட் டவர்ஸ்' என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வலையமைப்புக் கோபுரங்கள் (நெட்வொர்க் டவர்ஸ்) அமைக்கப்பட உள்ளன.தமி... மேலும் பார்க்க

காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!

'கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதை தொடர்ந்து,... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?

‘ஆதார் அட்டையா? அதெல்லாம் செல்லாது, செல்லாது!’ என்று வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா சூரி தொனியில் மறுத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலைப்பாட்டால் அதிர்ந்துபோயிருக்கிறார்கள் மக்கள்.இந்த ஆண்டு ... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியா?, கூட்டணி அரசா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதிமுகவின் மெளனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

நைட் டிரைவ் என்றொரு மலையாளத் திரைப்படம். போலியான வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்குமாறு ஆய்வாளரிடம் காவல் ஆணையர் தெரிவிப்பார், ‘தலையில் தொப்பி இருக்க வேண்டும் அல்லவா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற எச... மேலும் பார்க்க