செய்திகள் :

சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

post image

நைட் டிரைவ் என்றொரு மலையாளத் திரைப்படம். போலியான வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்குமாறு ஆய்வாளரிடம் காவல் ஆணையர் தெரிவிப்பார், ‘தலையில் தொப்பி இருக்க வேண்டும் அல்லவா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற எச்சரிக்கையுடன். ஆய்வாளர் பதிலளிப்பார் – ‘தலையிலுள்ள தொப்பி மட்டுமல்ல, தலையே போவதாக இருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக இதைச் செய்ய மாட்டேன்!’

திரைப்படங்களில் இதுபோல படுநேர்மையான காவல் அதிகாரிகளை அவ்வப்போது பார்த்திருக்கிறோம், ஹீரோ காப்ஸ்! ஆனால், நேரில் கேள்விப்பட்டிருக்கிறோமா? நிறையவேதான் யோசிக்க வேண்டியிருக்கும்.

காவல் துறையினரால் சிவகங்கை மாவட்டம் (மதுரை அருகேயுள்ள) மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் அடித்தே  கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் திரும்பிய பக்கமெல்லாம் செய்திகளும் சந்தேகங்களும் கணிப்புகளுமாகக் குவிந்துகொண்டிருக்கின்றன, இனி எழுத எதுவுமில்லை என்கிற அளவுக்கு. காவல்துறை கண்டுபிடிக்க அல்லது கண்டுகொள்ள விரும்பாத தகவல்கள் எல்லாமும்கூட சமூக ஊடகங்களில் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் அஜித் குமார் கொண்டுவரப்பட்டதாகப் பதிவாகியுள்ள நேரம் ஜூன் 28, இரவு 11.15 மணி.

‘பத்திரகாளியம்மன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தபோது, சில கோவில் ஊழியர்களும் காவலர்களும் வந்து ஒருவர் உணர்வின்றிக் கிடக்கிறார்; மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று அழைத்தனர். கோவிலிலிருந்து திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். அவருக்கு உணர்வில்லை; ஆனால், வெளிக்காயம் எதுவுமில்லை [என்னே ஒரு தொழில்நுட்பம்?]. நேரம் மாலை 6 மணி இருக்கலாம்’ என்றிருக்கிறார் ஆட்டோ டிரைவர்.

‘அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கொண்டுவரப்பட்டது. அவருடைய மரணத்தை நாங்கள் உறுதி செய்தோம். உடலைப் பிணவறையில் வைக்க அறிவுறுத்தினோம். ஏதோ உயர் அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, அவர்களுடைய வாகனத்தில் உடலை எடுத்துச் சென்றுவிட்டார்கள்; நேரம் மாலை 6.35 மணி இருக்கலாம்’ என்று தெரிவித்திருப்பவர் திருப்புவனம் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன்.

காவல்நிலைய மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கும் அஜித் குமார் கொண்டுசெல்லப்பட்டதாகவும் மதுரையில் இரவு 11.15 மணியளவில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் (தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள) காவலர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

திருப்புவனம் மருத்துவமனையில் மாலை 6.30 மணிக்குப் பிணவறையில் வைக்கச் சொன்ன சடலத்தைத் தூக்கிக்கொண்டு, மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்த நேரமான இரவு 11.15 மணி வரை, கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்தத் தனிப் படைக் காவலர்கள் எங்கெல்லாம் சென்றனர்? ஏன்? எதற்காக?

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பேரும் இந்த 5 மணி நேரத்தில் யார் யாருடன் எல்லாம் தொலைபேசி /  அலைபேசிவழி / வாட்ஸ்ஆப் காலில் பேசினார்கள்? இவர்களுக்கான உத்தரவுகளை /  அறிவுறுத்தல்களை / வழிகாட்டுதல்களை யார் யாரெல்லாம் பிறப்பித்தார்கள்? எங்கிருந்து பிறப்பித்தார்கள்? ஏன்?

சரி, ஜூன் 27 பகல் 11 மணியளவில் கோவிலுக்கு வந்திருக்கிறார் நிகிதா. வாய்வழிப் புகாரைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிவாக்கில் அஜித் குமாரைக் காவலர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்; மறுநாள் இரவு, ஏறத்தாழ 27 மணி நேரத்தில், அவர்   கொல்லப்பட்டுவிட்டார்.

எங்கள் கணவர்கள், மேலிடத்தில் சொன்னதைத்தான் செய்தார்கள், உத்தரவுக்குப் பணிந்தார்கள். சம்பந்தப்பட்டவர்களைத் தண்டியுங்கள். எங்கள் வீட்டுக்காரர்களை மட்டும் குற்றவாளியாக்காதீர்கள் என்று காவல்நிலையம் முன் மறியல் செய்த கொலைக் குற்றக் காவலர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

சொன்னதைச் செய்தார்கள் என்பதற்காகக் குற்றம் அல்ல என்றாகிவிடாது. ஆனாலும், குடும்பத்தினர் சொல்வதைப் போல, எய்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, வெறும் அம்புகளை மட்டுமே சிக்க வைப்பதும் நியாயமாக இருக்க முடியாதுதானே!

கொலைக்குக் காரணம் தனிப்படை என்றால், அந்தத் தனிப்படைக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் இடத்தில் இருப்பவர் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம். அவருக்கு உத்தரவிடக் கூடிய அடுத்த நிலையில் இருப்பவர் (சிவகங்கை) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத். ஒருவேளை அவர் அல்லர் என்றால் அவருக்கும் மேலேயிருந்து யாரோ ஒருவர் அல்லது சிலர் அறிவுறுத்தியிருக்கலாம்.

[டிஎஸ்பி பார்ட்டி போல டிஐஜி பார்ட்டி, அவருடைய பார்ட்டி, இவருடைய பார்ட்டி என்று நிறைய தனிப்படைகள் இருக்கின்றனவாம். இவர்கள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யார் சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்களாம். இவற்றையெல்லாம்தான் கலைக்குமாறு தற்போது அறிவுறுத்தியுள்ளார்கள். இந்த ஸ்பெஷாலிட்டியால்தான் அஜித் குமார் கொலையில் திருப்புவனம் காவல்நிலையத்துக்குப் பொறுப்பான ஆய்வாளர், உதவி ஆய்வாளர் எல்லாம் சீனிலேயே காணவில்லை போல].

ஆக, நிகிதா நுழையும் ஜூன் 27 பகல் 11 மணி தொடக்கம் அஜித் குமார் சாவுக்கு மறுநாளான 29 ஆம் தேதி பகல் 11 மணி வரையிலான 48 மணி நேரத்தில் நிகிதா, தனிப்படைக் காவலர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் (மற்றும் இவர்களின்  உதவியாளர்கள்) ஆகியோருடைய தொலைபேசி /  அலைபேசிவழி / வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளின் பட்டியலை வைத்துப் பார்த்தாலே  கொலைக் குற்றப் பட்டியலில் இன்னும் சேர்க்கப்பட வேண்டியவர்கள் யார் யாரெனத் தெளிவாகத் தெரிய வந்துவிடலாம்! இன்றைய நிலையில் கண்டிப்பாக மக்களுக்கு இவர்களைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

காவல் அதிகாரிகள் என்பதற்காக இடைநீக்கம் செய்வதும் காத்திருப்பில் வைப்பதுமே தண்டனைகளாகிவிடாது. நிச்சயமாக, உத்தரவிட்டதாக யாரையும் தனிப்படைக் காவலர்கள் சொல்லப் போவதில்லை, ‘விசாரிப்பதற்காக அடித்தோம், தவறுதான், அவர் செத்துப்போய்விட்டார், கொலை செய்யும் நோக்கமில்லை’ என்றுதான் கூறுவார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும், கடைசி வரையிலும் அவர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் காவல்துறையும் அரசு எந்திரமும் செய்யும் என்பது – ஆளுங்கட்சியாக யார் இருந்தாலும்!

2020 ஜூன் 22-ல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளான பிறகும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

2018 மே 22-ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பட்டப்பகலில் துள்ளத் துடிக்கக் காக்கை குருவிகளைப் போல 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட அநியாயத்தில் குற்றவாளிகளான காவல்துறையினர் இன்னமும் எவ்வாறெல்லாம் அதிகார அமைப்புகளால் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது  தொடர்ந்து கவனிப்போருக்குத் தெரியும். பாவம், நீதிபதி அருணா ஜெகதீசன்  விசாரணை கமிஷன்!

யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, காவல்துறை அவர்களுக்குத் தேவை. காவல்துறையினர் என்ன செய்தாலும் அவர்கள் மன்னிக்கத் தயாராக இருப்பார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்கிற அளவுக்குக் குரல் கொடுப்பவர்கள்கூட, ஆளுங்கட்சியானதும் புத்தர்களாக உருத்திரிந்து, அவற்றையெல்லாம் மறந்து, மன்னித்து விடுவார்கள். காரணம், அரசும், ஆட்சியும், காவல்துறையும் அந்தளவுக்குப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றின்றி  மன்றொன்றில்லை! மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நம் காவல்துறைக்குள்ள அதிகாரமும் அணுகுமுறையும் பிரிட்டிஷார் பாணியிலிருந்து  மாறவேயில்லை எனலாம். நம் நாடு, நம் மக்கள் என்பதெல்லாம் காவல்துறைக்குத் தெரியுமா? இன்னமும் அடிமை நாட்டு மக்களைக் கையாளும் அதே ஆங்கிலேய மனநிலை. நீதிமன்றமும் கேட்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலத்துக் காவல்துறைச் சட்டங்கள்தான் இன்னமும் ‘பட்டி டிங்கரிங்’ பார்த்துத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

ஒரு கணக்கிற்காக எடுத்துக்கொண்டால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்திருக்கும் 25-வது காவல்நிலைய மரணம் இது என்கிறார்கள். மிகவும் பரபரப்பானதால் அஜித் குமார் சாவில் கொலை வழக்கு பதியப்பட்டு, 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்தைய 24 காவல் நிலையச் சாவுகளில் எத்தனைக்குக் கொலை வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன? அவற்றுக்காக எத்தனை போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? சர்வமும் சந்தேக மரணம்தான் (தானாகவே அவர்கள் செத்துப் போய்விட்டிருப்பார்கள்)! இப்போது அஜித் குமார் வீடுதேடி ஆறுதல் கூறுவதற்காகப் படையெடுக்கும் அத்தனை அரசியல் தலைவர்களும் ஏன் இவர்களையெல்லாம் கைவிட்டார்கள் என்று தெரியவில்லை.

அரசியல், அதிகார அல்லது ரௌடிகளின் ஆதரவோ செல்வாக்கோ இல்லாமல், காவல்துறையினரைக் கேள்வி கேட்டுவிட்டு, இப்போதும் சாமானியன் ஒருவனால் வாழவே முடியாது. ஏனெனில், டிசைன் அப்படி. நம் காவல்துறையின் அடிப்படையான சிந்தனையே ஒட்டுமொத்தமாகக் கழுவித் துடைத்தெறியப்படாத வரையில் – இந்தச் சாவுக்குக் காரணமான அம்புகள் மட்டுமின்றி எய்தவர்கள் உள்பட அனைவரும் தண்டிக்கப்படாத வரையில் - இன்னும் பல அஜித் குமார்களின் இறுதி யாத்திரைகள் தொடரத்தான் செய்யும்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று எழுதிவைத்தால் மட்டும் போதாது!

படு(கோழை)கொலைகள்!

திருமணமாகி மூன்று மாதங்கள்கூட ஆகாத நிலையில் கணவன் வீட்டுக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் அவிநாசியில் ரிதன்யா என்ற புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

பெண்ணுக்கு 300 பவுன் நகை போட்டார்களாம், மாப்பிள்ளைக்கு 60 லட்சத்தில் காராம், 6 கோடி ரூபாய் செலவு செய்து திருமணமாம். ஆனாலும் வரதட்சிணைக் கொடுமையாம். வாழ்க்கை நரகமாம். ‘அம்மா, அப்பா, தாங்க முடியவில்லையே’  என்று மகள் கதறியபோது அனுசரித்துப் போகச் சொல்லி அறிவுரையாம். ச்சே!

ஒரேயடியாகத் தூக்கிட்டு நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துவிட்டாள் ரிதன்யா. பெண்ணுக்கு இவ்வளவு சம்பாதித்துக் கொடுக்கத் தெரிந்த பெற்றோருக்கு, ஏன், தாலி கட்டியது தறுதலை என்றதும், ‘ச்சீ கெரகமே’ எனத் தூக்கிப்போட்டு மிதித்தெறிந்து விட்டுச் சுயமாகச் சிந்திக்க, முடிவெடுக்கச் சொல்லிக் கொடுக்க முடியாமல் போய்விட்டது?

வரதட்சிணை என்பது 500 பவுனாகவும் இருக்கலாம், 5 பவுனாகவும் இருக்கலாம். ஆசை, பேராசைக்கு மட்டும்தான் எல்லையென்பதே இல்லையே.

சென்னை அருகே பொன்னேரியில் மணமான நாலாவது நாளே தற்கொலை செய்துகொண்டுவிட்டார் மணப்பெண் லோகேசுவரி – ஒரே ஒரு பவுன்தான் பிரச்சினை!

பத்து பவுன் கேட்டார்கள், ஐந்து பவுன் போடுவதாகச் சொன்னார்கள், நாலு பவுன்தான் போட முடிந்தது. தாலி கட்டியதுமே சித்திரவதையைத் தொடங்கிவிட்டார்களாம், மீதி ஒரு பவுனும் உடனே வேண்டும் என்று. மறுவீட்டுக்காகத் தாய்வீடு வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். விடுதலை!

பிறகென்ன, வழக்கம்போல வரதட்சிணைக் கொடுமை, தற்கொலைக்குத் தூண்டினார்கள் என வழக்குத் தொடுப்பார்கள். நம்முடைய காவல்துறை, நம்முடைய நீதிமன்றங்கள். நாம் காத்திருக்க வேண்டியதுதான்.

பெற்ற வயிறுகள் எப்படி எரிகின்றனவோ, இவற்றையெல்லாம் கேட்கவும் பார்க்கவும் படிக்கவும் ஒட்டுமொத்தமாக மக்கள் வயிறுகள் எரிகின்றன!

பயிரை மேயும் வேலி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயதுப் பெண் குழந்தையைத் தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று, போதை ஊசி செலுத்தி மயங்கச் செய்து வல்லுறவு கொண்டதாம் ஒரு மிருகம். என்ன, அதுவே சீருடை அணிந்துகொண்டு ஆயுதப் படையில் காவல் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

போதை ஊசி செலுத்தப்பட்டதையும் வல்லுறவையும் குழந்தைக்குச் சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை டாக்டர்களும் உறுதி செய்திருப்பதாகத் தெரிகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்திருக்கிறார்களாம்; கைது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், குற்றவாளியின் வீட்டின் முன் தகராறு செய்ததாகவும் அங்கு விசாரிக்க வந்த காவலர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் குழந்தையின் தந்தை மீதும் ஒரு வழக்குப் பதிந்திருக்கிறது காவல்துறை. சபாஷ், நல்ல பாடம்!

ம். என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

இதையும் படிக்க... சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

பழம்பெருமைமிகு இந்தியா...5 மொழி, கலைகள் எப்படி இருந்தன?

மொழியியல்இந்திய இலக்கியம் சில தடைகளை எதிர்கொண்டாலும் பல புதுமைகளைக் கண்டுள்ளன. நவீன எழுத்தாளர்கள் பண்டைய கதைகள் மற்றும் பழக்கவழக்கங்களை குறிப்பாக காலனி ஆதிக்கத்திற்கு எதிராக எழுதியுள்ளனர். கிமு 300ல் ... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...4 ஆயுர்வேதம், யோகா எப்படி வந்தன?

மருத்துவம்இந்தியா மருத்துவத்திலும் மிகப் பழங் காலம் முதலே சிறந்து விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முக்கியமானது ஹரப்பா நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு. இதில் மூ... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...3 கணித, அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகள்!

பழங்கால இந்தியாவில் அறிவியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன. அறிவியல்ஐசக் நியூட்டன் 1966ல் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

“பல பதிற்றாண்டுகளாக ரத்தம் சிந்தப் போரிட்டுக்கொண்டிருந்த காங்கோவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையே உடன்பாட்டுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இணைந்து, ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...2 கட்டடக் கலையின் சிறப்புகள்!

இந்தியாவின் பொறியியல் அல்லது கட்டடக் கலை சாதனைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக அல்லது அதனை மிஞ்சுவதாகவே இருந்தன. பொறியாளர்களின் துல்லிய தன்மை, வடிவமைப்பு, அறிவு என பல கட்டடங்கள், நினைவுச் சின்னங... மேலும் பார்க்க

உலகை மாற்றவிருக்கும் நேட்டோவின் முடிவுகள்!

தங்களின் ஒவ்வோா் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 5 சதவீதம் தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் 2 சதவீத உள்நாட்டு உற்பத்த... மேலும் பார்க்க