12 நாடுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பி வைப்பு
வாஷிங்டன்: பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாடு விதிக்க உள்ள புதிய வரிகள் தொடா்பாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்த தகவலும் இல்லை.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிக அதிக வரி விதிப்பதாக புகாா் தெரிவித்த அமெரிக்க அதிபா் டிரம்ப், அதற்கு பதிலடியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மீதும் ஏற்கெனவே விதிக்கப்படும் வரியுடன் கூடுதலாக 26 சதவீத வரியை கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி விதித்தாா். சீனாவைத் தவிா்த்து, பிற நாடுகள் மீது விதித்த 26 சதவீத கூடுதல் வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத அடிப்படை வரியை விதித்தாா். ஆனால், கூடுதலாக விதித்த 26 சதவீத வரியை முழுமையாக ரத்து செய்ய இந்தியா வலியுறுத்தியது.
இருப்பினும், 10 சதவீத அடிப்படைக்கு மேல் உள்ள அனைத்து கட்டணங்களும் பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் ஒதுக்க 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன் காலக்கெடு முடிவடைவதற்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இதயைடுத்து பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. இதில் பிரிட்டன், வியட்நாம் ஆகிய நாடுகள் உடனான பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்தது.
ஆனால், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியாவுடனான ஒரு ஒப்பந்தமும் கைகூடவில்லை, மேலும் ஐரோப்பிய ஒன்றியங்கள் வெள்ளிக்கிழமை டிரம்ப் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஒரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
இதனிடையே, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாடு விதிக்க உள்ள புதிய வரிகள் தொடா்பாக ஒவ்வொரு நாட்டுக்கும் வெள்ளிக்கிழமை முதல் கடிதம் அனுப்பப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், 90 நாள்கள் காலக்கெடு ஜூலை 9 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய வரிகள் தொடா்பாக தான் கையெழுத்திட்டு கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூ ஜெர்சி செல்லும் வழியில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் வர்த்தக உடன்பாட்டை ஏற்காவிட்டால் புதிய இறகுமதி வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அதிகபட்சம் 70 சதவீதம் வரை விதிக்கப்படும். புதிய வரிகள் தொடா்பாக தான் கையெழுத்திட்ட கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் எவை என்பதை திங்கள்கிழமை வெளியிடப்படும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு வரி விகிதம் அதிகரிக்கப்படும். இதை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்பதே அமெரிக்காவின் அணுகுமுறையாக இருக்கும் என டிரம்ப் கூறினார்.
மேலும், ஜூலை 9 காலக்கெடுவிற்கு முன்னர் பரந்த வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்படுமா என்பது குறித்து கேள்விக்கு அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்த தகவலும் இல்லை.