சொந்த மொழியில் கற்றுக்கொள்வதே சிந்தனையை மேம்படுத்தும்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 780 ஆக அதிகரிப்பு: ஜே.பி. நட்டா
புது தில்லி: நாட்டில் தாய்-சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது எனவும் 2014-இல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 780 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை 1,300 புதிய செவிலியா்களை நியமித்தது, மேலும் தேசிய தலைநகரில் சுகாதார அமைப்பை வலுப்படுத்த ஆயுஷ்மான் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜே. பி. நட்டா ஆயுஷ்மான் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் ரேகா குப்தா, சுகாதார துறை அமைச்சா் பங்கஜ் சிங் மற்றும் பிற மூத்த அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி. நட்டா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, தில்லியில் செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் நியமனக் கடிதங்களைப் பெறுவதால் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்றும், சிறப்புப் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தில்லி அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
நாடு முழுவதும் மக்கள் சிகிச்சைக்காக தில்லிக்கு வருவதால் தில்லியில் அதிக சுகாதாரப் பணிச்சுமை நிலவுகிறது. முன்பு இது அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய தில்லி அரசு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஆகியவற்றை செயல்படுத்தி வருவதாக பாராட்டினார்.
அனைவருக்கும் சமமான, தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்த நட்டா, நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் கீழ் பல்வேறு நோய்களுக்கான ஆரம்பகால நோய் அறிதலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
18 கோடி உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள்
இதுவரை, உயர் ரத்த அழுத்தத்திற்கு 18 கோடி பரிசோதனைகளும், நீரிழிவு நோய்க்கு 17 கோடி பரிசோதனைகளும், வாய்வழி புற்றுநோய்க்கு 15 கோடி பரிசோதனைகளும், மார்பக புற்றுநோய்க்கு 7.5 கோடி பரிசோதனைகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 4.5 கோடி பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தாய் மற்றும் குழந்தை பராமரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பேசிய நட்டா, ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் கருத்தரித்தல் முதல் குழந்தை பிறப்பு, குழந்தைப் பருவ பராமரிப்பு வரை சேவை வழங்கப்படுகிறது என்று கூறினார்.
தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவு
பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 130-லிருந்து 88 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் குழந்தை இறப்பு விகிதம் 39-லிருந்து 26 ஆகக் குறைந்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மருத்துவக் கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சியை எடுத்துரைத்த நட்டா, நாட்டில் 2014 ஆம் ஆண்டு வரை 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது 20 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகள் செயல்பட்டுள்ளன. அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 780 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 51,000 -லிருந்து 1,18,000 ஆக அதிகரித்துள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று நட்டா கூறினார்.