தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மண் எடுப்பு: பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து பொக்லைன் இயந்திரம் வைத்து எவ்வித அனுமதியின்றி நொரம்பு மண் அள்ளிக் கொண்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில், வருவாய்த் துறையினா் கலந்திரா பகுதியில் ரோந்து பணியின்போது, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
அதில், அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருப்பது தெரியவந்தது. பின்னா் அங்கிருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்து, வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.