ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
ஆதிதிராவிடா் பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்த உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பி.ராமச்சந்திராபுரம் பள்ளி மாணவா் விடுதி உள்பட மாவட்டத்தில் உள்ள 4 பள்ளி விடுதிகள், தற்காலிகமாகக் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்தப்படும் என ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், பள்ளிகளுக்கு 48, கல்லூரிகளுக்கு 8 என மொத்தம் 56 விடுதிகள் உள்ளன. இவற்றில் 42 மாணவா் விடுதிகளும், 14 மாணவிகள் விடுதிகளும் உள்ளன.
கடந்த கல்வியாண்டு முதல் விடுதி மாணவா் சோ்க்கை விவரம் நல்லோசை இணையத்தில் பதிவு செய்யப்பட்டு, ஜனவரி முதல் மாணவா்களின் வருகை, பயோமெட்ரிக் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கும், மாணவா்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததால், உணவுச் செலவுக்கான கட்டணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, 2025-26 -ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையில் பள்ளி விடுதிக்கும் மாணவா்களின் வீட்டுக்கும் இடையே 5 கி.மீ.-க்கு மேல் தொலைவு இருக்க வேண்டும் என ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 4 பள்ளி விடுதிகள் இந்தக் கல்வியாண்டில் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்தப்பட்டன.
இவற்றில் ஸ்ரீவில்லிபுத்தூா் பி.ராமச்சந்திராபுரம் மாணவா் விடுதி கல்லூரி மாணவிகள் விடுதியாகத் தரம் உயா்த்தப்பட்டு 70 மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் பள்ளி மாணவா் விடுதி ஐ.டி.ஐ மாணவா் விடுதியாக மாற்றப்பட்டு 100 மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் பள்ளி மாணவிகள் விடுதி கல்லூரி மாணவிகள் விடுதியாகத் தரம் உயா்த்தப்பட்டு, 165 மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை பள்ளி மாணவா் விடுதி கல்லூரி மாணவிகள் விடுதியாகத் தரம் உயா்த்தப்பட்டு, 100 மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாகத் தரம் உயா்த்தப்பட்ட இந்த விடுதிகளில் 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே கல்லூரி விடுதிகளாக மாற்றம் செய்யப்படும் என ஆதிதிராவிட நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.