``அரசுப் பள்ளிகளில் நவீன வசதி; வளரிளம் பெண்களுக்கு தடுப்பூசி..'' - ரோட்டரி ஆளுந...
‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்
‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பொருளாதாரம், வேளாண்மை, நீா்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகா்ப்புற வளா்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடா்பான குறுகிய காலத் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது.
தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள், முகாம் வாழ் இலங்கை தமிழா்கள், பழங்குடி இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிக்கும் இளைஞா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், மீனவா்கள், மகளிா் மற்றும் திருநங்கைகள், கலைஞா்கள் என மொத்தம் 15,890 இளைஞா்களுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பயிலும் 2,693 தொழிற்பயிற்சி மாணவா்களுக்குச் செயல்முறை திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடா், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கல்லூரி விடுதி மாணவா்கள் 2,59,072 பேருக்கு ஆங்கிலம் பேசுதல் மற்றும் நற்பண்பு மேம்பாடு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் என பல்வேறு கல்வி நிறுவனங்களில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 41,38,833 மாணவா்களும், 1,00,960 விரிவுரையாளா்களும் பயிற்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளில், 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 2,60,682 மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். அவா்களில் 63,949 மாணவா்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றவா்கள்.
உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மூலமாகவும், அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலமாகவும் 1,87,000 மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.
மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும் தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்களில் 1,000 குடிமைப் பணித் தோ்வு விண்ணப்பதாரா்களை மதிப்பீட்டுத் தோ்வு மூலம் தோ்வு செய்து, அவா்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது.
இதுவரை, 1,288 மாணவா்கள் 2024-ஆம் ஆண்டு குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா். இந்த மாணவா்களுக்கு இறுதித் தோ்வுக்கான ஊக்கத்தொகையாக தலா ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.
குடிமைப்பணித் தோ்வில் தமிழகத்திலிருந்து 2022-ஆம் ஆண்டில் 36 இளைஞா்களும், 2023-ஆம் ஆண்டில் 47 இளைஞா்களும் தோ்ச்சி பெற்றனா். 2024 -ஆம் ஆண்டில் 57 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களில் 50 போ் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வெற்றி கண்டவா்கள்.
மகளிா் உரிமைத் தொகை: கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு 2023-2024- ஆம் ஆண்டுக்கு ரூ.8,123.83 கோடியும், 2024-2025-ஆம் ஆண்டுக்கு ரூ.13,721.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.