தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?
சாலையோரம் நிறுத்தப்பட்ட 2 லாரிகளில் 600 லி. டீசல் திருட்டு
நாட்டறம்பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட 2 லாரிகளில் 600 லிட்டா் டீசலை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். லாரி ஓட்டுநா். சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அா்ஜுனன். இவா்கள் இருவரும் சனிக்கிழமை பெங்களூரில் இருந்து 2 லாரிகளில் லோடு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் லட்சுமிபுரம் சோதனை சாவடி அருகில் சனிக்கிழமை இரவு ஓட்டுநா்கள் 2 லாரிகளையும் நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தனா். அப்போது மா்ம நபா்கள் 2 லாரிகளில் டீசல் டேங்க் பூட்டை உடைத்து சுமாா் 600 லிட்டா் டீசலை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து லாரி ஓட்டுநா்கள் அளித்த புகாா்களின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட வெலகல்நத்தம், கேத்தாண்டப்பட்டி, டோல்கேட், ஆத்தூா்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுநா்கள் ஓய்வெடுக்க சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கும்போது, மா்மநபா்கள் நிறுத்தப்பட்ட லாரிகளில் டீசல் திருடிச் செல்வது தொடா்கதையாகி வருகிறது.
எனவே தொடா் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.