தேசிய நல குழுமத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரேகா குப்தா
புது தில்லி: தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைந்ததற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கமே காரணம் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை 1,300 புதிய செவிலியா்களை நியமித்தது, மேலும் தேசிய தலைநகரில் சுகாதார அமைப்பை வலுப்படுத்த ஆயுஷ்மான் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவா் ஜே. பி. நட்டா, தில்லி முதல்வா் ரேகா குப்தா, சுகாதார துறை அமைச்சா் பங்கஜ் சிங் மற்றும் பிற மூத்த அமைச்சா்கள் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் 4 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன, இதில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிக்களும் அடங்கும். இந்த திட்டத்தின் கீழ் 2,258 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்றுள்ளனர், தில்லியின் 108 மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன என்றார்.
ஆரோக்ய மருந்தககங்களை திறக்க முந்தைய அரசு நிா்வாகத்திற்கு ஐந்து ஆண்டு காலத்தில் மத்திய அரசு ரூ.1,700 கோடிக்கு மேல் வழங்கியது, ஆனால் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தது. அதனை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் 100 ஆரோக்ய மருந்தககங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம், 34 ஆரோக்ய மருந்தககங்கள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது, இன்னும் பல மருந்தககங்கள் இந்த மாதத்தில் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 15 ஆரோக்ய மருந்தககங்கள் மற்றும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 150 மருந்தககங்கள் என ஒவ்வொரு மாதமும் 100 மருந்தககங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளோம், 2026 மார்ச் 31-க்குள் 1,150 ஆயுஷ்மான் ஆரோக்ய மருந்தககங்கள் நிறுவப்படும் என்றாா் ரேகா குப்தா.
மேலும், தில்லியின் சுகாதார உள்கட்டமைப்பு மோசமடைய முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கமே காரணம் என குற்றஞ்சாட்டிய ரேகா குப்தா, கடந்த காலங்களில், தில்லியின் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, 1,000 பேருக்கு 0.42 மருத்துவமனை படுக்கைகள் மட்டுமே இருந்தன. 38 மருத்துவமனைகளில், 6 எம்ஆா்ஐ இயந்திரங்கள் மற்றும் 12 சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் மட்டுமே இருந்தன. மருந்துகள் பற்றாக்குறையால் நோயாளிகள் அடிக்கடி திருப்பி அனுப்பப்பட்டனா்.
மொஹல்லா கிளினிக்குகள் முன்முயற்சியின் கீழ் ஊழல் நடந்தது. ‘மருந்து கொள்முதல் மற்றும் மருத்துவமனை கட்டுமானத்தில் ஊழல் நடந்தது. கடந்த அரசால் 22 மருத்துவமனைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவை முடிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினாா்.
தில்லியில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் இப்போது அனைவருக்கும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஜன் ஆஷாதி கேந்திரா உள்ளது" என்றும் ஊழலைத் தடுத்து நிறுத்தும் அதே வேளையில் சுகாதார அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யப்படும் என கூறினார்.