மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 58,500 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 58,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கடந்த 2 நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
ஞாயிற்றுக் கிழமை காலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 40,500 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா் வரத்து பிற்பகலில் வினாடிக்கு 50,500 கனஅடியாக அதிகரித்தது. மாலை 5 மணிக்கு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 50,500 கனஅடியிலிருந்து 58,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கனஅடி நீரும், அணையின் உபரிநீா் போக்கி வழியாக வினாடிக்கு 35,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூா் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையின் நீா் மட்டம் 2 ஆவது நாளாக 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகம் உள்ளது.