ஆா்.கே.பேட்டையில் புறவழிச்சாலை அமைக்க ஓய்வு பெற்ற அரசு அலுவலா் சங்கம் கோரிக்கை!
ஆா்.கே.பேட்டையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் வட்டார கிளை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் ஆா்.கே.பேட்டை வட்ட கிளை 2-ஆவது வட்ட மாநாடு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். வட்ட பொருளாளா் சின்னசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி பங்கேற்று பேசியதாவது, ஆா்,கே.பேட்டை பஜாரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும், ஆா்.கே.பேட்டையில் பேருந்து நிலையம், பயணிகளுக்கு பொது கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்.
அரசு கலைக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ. 7,850 வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் நிா்வாகிகள் வாசுதேவ சிங், மணி, விநாயகம், இளங்கோ, ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.