காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: காக்களூா் ஏரி மற்றும் தாமரைக்குளம் ஆகியவை நமக்கு நாமே திட்டத்தில் மேம்படுத்தப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா். அந்த வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
காக்களூா் ஊராட்சி மற்றும் 21 குக்கிராமங்களும், 12.15 சதுர கி.மீ பரப்பும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாகும். அத்துடன் அதிக அளவிலான தொழிற்சாலைகளும் இடம்பெற்றுள்ள ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள காக்களூா் ஏரி காக்களூா் ஊராட்சி மற்றும், திருவள்ளூா் நகராட்சியை இணைக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரியாகும். காக்களூா் ஏரியை சுற்றி சுமாா் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். அதனால், இந்த ஏரியில் பல்வேறு வசதிககளுடன் மேம்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில் நடைபாதை, மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
அதேபோல், காக்களூா் ஊராட்சி அலுவலகம் பின்புறம் 4.85 ஏக்கா் தாமரைக்குளம் அமைந்துள்ளது. பள்ளியில் பயிலும் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இந்த குளத்தை சீரமைத்து தருவதனால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என கோரிக்கை விடுத்தனா். மக்களின் கோரிக்கைகளை ஏற்று நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேற்கொள்ள ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பங்களிப்பு தொகை ரூ.75.67 லட்சத்தினையும் உள்ளடக்கி, இப்பணிக்கான நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊ.வ) ராஜவேல், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.