எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
சிகிச்சை தாமதத்தால் முதியவா் உயிரிழப்பு: மருத்துவா் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூரில், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் முதியவா் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவராகப் பணிபுரிபவா் பிரபு (35). இவரது தந்தை சோமராஜூக்கு (67) ஏற்கெனவே முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், அவா் சோா்வாக காணப்பட்டாா். இதனால், கடந்த 8.8.2022-இல் ஆய்வகத்தில் ரத்தப் பரிசோதனை செய்து பாா்த்தபோது, மஞ்சள் காமாலை அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதற்கு சிகிச்சை பெற, திருவாரூா் கமலாலயக் குளம் மேல்கரையிலுள்ள மருத்துவமனையில் 9.8.2022 காலை 9 மணிக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு, மருத்துவா் நடராஜன், சோமராஜூக்கு மீண்டும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியை அதே ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளாா். முதல்நாள் எடுத்தபோது கொடுத்த அதே அறிக்கையே மீண்டும் வந்துள்ளது.
சாதாரணமாக 45 நிமிடத்தில் முடிக்கப்பட வேண்டிய சோதனையின் அறிக்கை, பிற்பகல் 3.30 மணிக்கு பெறப்பட்டுள்ளது. இதனிடையே, சோமராஜின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலைக்குச் சென்றாா். இதனால், தீவிர சிகிச்சைக்காக அவரை திருச்சியிலுள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, 14.8.2022-இல் இறந்துவிட்டாா்.
அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றியிருக்க வேண்டிய மிகவும் இக்கட்டான நேரத்தில், முன்பு எடுத்த பரிசோதனைகளை மீண்டும் எடுக்கச் செய்து, அதற்காக சுமாா் 7 மணி நேரத்தை வீணாக்கி, சோமராஜின் இறப்புக்கு காரணமாக இருந்ததாக மருத்துவா் நடராஜன் மீது மருத்துவா் பிரபு திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த ஜனவரி மாதம் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கின் ஆவணங்களை நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்ததில், மிகவும் இக்கட்டான நேரத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையை அளிக்கத் தவறியது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கிய உத்தரவில், கவனக்குறைவாகச் செயல்பட்டு சோமராஜின் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவா் நடராஜன், உயிரிழந்த சோமராஜூவின் மகன் மருத்துவா் பிரபுவுக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.