எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
புது தில்லி: அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள பழனிசாமிக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக 3 முறை அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜூலை 7ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை வைத்திருந்தார். சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, இந்த கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.