``நீதிக்காக வன்முறையில் ஈடுபடுவோம்'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்கள் மேடையில் பேச்சு
மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் 1-5 வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதோடு போராட்டமும் நடத்தப்போவதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே ஆகியோர் அறிவித்ததோடு, ஒன்று சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.

இந்த பேரணி இன்று நடப்பதாக இருந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்கடியால் பள்ளிகளில் மும்மொழி திட்டம் கட்டாயமாக்கப்படாது என்றும், மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற அரசாணை திரும்ப பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
இதையடுத்து இந்தி திணிப்பு போராட்டம் வெற்றி பெற்றதாக தாக்கரே சகோதரர்கள் அறிவித்தனர். அதோடு 5-ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்த போராட்ட பேரணியை வெற்றி விழா பொதுக்கூட்டமாக நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன் படி இன்று இரு கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் மும்பை ஒர்லியில் நடந்தது.
இக்கூட்டத்தில் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒன்றாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ராஜ் தாக்கரே, ''பால் தாக்கரே மற்றும் பலரால் செய்ய முடியாததை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்து முடித்து இருக்கிறார். என்னையும், உத்தவ் தாக்கரேயையும் ஒன்றாக சேர்த்துள்ளார். விதான் பவனில் வேண்டுமானால் நீங்கள் ஆட்சி செய்யலாம். ஆனால் தெருக்களில் எங்களது ஆட்சிதான் நடக்கிறது. மராத்தி மக்களின் கடுமையான ஒற்றுமை காரணமாகத்தான் இன்றைக்கு மும்மொழி கொள்கையை மாநில அரசு கைவிட்டுள்ளது.

மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்கவே மும்மொழி திட்டத்தை திட்டமிட்டு கொண்டு வருகின்றனர். எல்.கே.அத்வானி மிஸ்ஷனரி பள்ளியில் தான் படித்தார். அதற்காக அவரது இந்துத்துவாவில் நாம் சந்தேகப்படுகிறோமா? பால் தாக்கரே ஆங்கில மீடிய பள்ளியில் படித்தார். ஆனால் ஒருபோதும் மராத்திக்காக சமரசம் செய்து கொண்டது கிடையாது. இந்தி திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மராத்தி படித்தோம். இப்போது குழந்தைகள் ஆங்கிலம் படிக்கின்றனர். தென்னிந்திய நடிகர்கள் இன்றைக்கு ஆங்கிலம் படித்துவிட்டு சிறப்பாக இருக்கின்றனர்'' என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, ''இன்றைக்கு நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். எங்களது பேச்சைவிட இந்த மேடை மிகவும் முக்கியமானது. பல ஆண்டுகளுக்கு பிறகு நானும், ராஜ் தாக்கரேயும் ஒரே மேடையில் வந்திருக்கிறோம். ராஜ் சிறப்பான ஒரு உரையை நிகழ்த்திவிட்டு சென்று இருக்கிறார். எனவே நான் பேசவேண்டியிருக்காது என்று நினைக்கிறேன். எங்களுக்கு இடையிலான இடைவெளியை நீக்கி இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருப்போம்'' என்றார்.
மராத்தி பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை பொருத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய உத்தவ் தாக்கரே, எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்போம் என்று தெரிவித்தார். தாக்கரே சகோதரர்களின் இந்த பொதுக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடைசியாக 2005-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும் இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, அதிகாரப்போட்டி போன்ற காரணங்களால் ராஜ் தாக்கரே தனியாக பிரிந்து சென்றார். அதன் பிறகு இருவரும் ஒருபோதும் ஒரே மேடையில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது. இப்போதுதான் மராத்திக்காக ஒரே மேடையில் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் வரும் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றனர்.
இக்கூட்டம் குறித்து மும்பை பா.ஜ.க மூத்த தலைவர் அசிஷ் ஷெலார் கூறுகையில், ''அவர்களுக்கு மொழி மீது பற்று கிடையாது. தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதால் குடும்பமாக சேர்ந்து வெற்றி பெற நினைக்கின்றனர்'' என்றார்.