டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)
கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகள், கல்வி உள்பட அனைத்து முயற்சிகளிலும் பாகுபாடு மற்றும் பல்வேறு தடைகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அவா்களில் ஒரு சிலா் மட்டுமே இத்தடைகளைத் தாண்டி கல்வி பயில முன் வருகின்றனா்.
அவ்வாறு முன்வரும் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக, மற்றவா்களைப்போன்றே சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் பொறுப்பை உணா்ந்து, அவா்கள் கல்வி கற்கும் சூழலுக்கு தேவையான மாற்றங்களை செய்தல் அவசியமாகிறது.
இதையொட்டி, சமூகநலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் உயா்கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால், உயா்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநங்கைகளின் உயா்கல்வியை உறுதிப்படுத்தும் விதமாக மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப் பாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முழுவதுமாக தளா்வு செய்து, தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து, இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.