'விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால்..!' - கனிமொழி சொல்வது என்ன?
நேற்று (ஜூன் 4) திருநெல்வேலியில் நடைபெற்ற ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி.யும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழியிடம் தவெக குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “ தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலாக இருக்காது. அதிமுக, தவெக இடையே சவாலாக இருக்கலாம்.

நிறைய பேர் தனித்து போட்டியிடலாம் அது அவர்கள் தனிப்பட்ட முடிவு. தனித்துப் போட்டியிடுவோம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்திருப்பதற்கு வாழ்த்துகள்.
ஆனால் வெற்றி என்பது நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு தான் என்பது மக்களின் வரவேற்பை பார்க்கும் போது தெரிகிறது. திமுக கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.
முதலமைச்சரை ஏற்றுக்கொண்டு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் நம்மோடு இணைந்து பணியாற்றலாம். அவர்களின் பக்கத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதிமுகவை யாரும் கபளிகரம் செய்ய முடியாது என இபிஎஸ் கூறியிருப்பார்.
பாஜக உடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மக்களுடைய எதிரிகள் யார்? என்பதில் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் யாரை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். மக்கள், திமுக மீது, முதலமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஓரணியில் தமிழகம் என்பதில் மக்கள் ஆர்வமாக இருப்பது வரக்கூடிய தேர்தல்களின் முடிவுகளின் அறிகுறியாக பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.