செய்திகள் :

TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததின் பின்னணி என்ன?

post image

'தவெக செயற்குழுக் கூட்டம்!'

தவெகவின் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. தவெக தலைமையில்தான் கூட்டணி. விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறுதியிட்டு கூறுவதற்காகவே இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

தவெக செயற்குழுக் கூட்டம்
தவெக செயற்குழுக் கூட்டம்

விஜய்யின் திட்டம் என்ன? செயற்குழுவில், நாங்கள் என்ன திமுகவா அதிமுகவா? பா.ஜ.கவுடன் என்றைக்கும் கூட்டணி கிடையாது என விஜய் கர்ஜித்ததன் பின்னணி என்ன? தனித்துப் போட்டியிடுவதற்காக தவெக செய்து வரும் களப்பணிகளின் தற்போதைய நிலைமை என்ன?

'பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை...'

கட்சி தொடங்கி கடந்த அக்டோபரில் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார் விஜய். அந்த மாநில மாநாட்டிலேயே கொள்கை எதிரி பா.ஜ.க. அரசியல் எதிரி தி.மு.க என விஜய் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில்தான் அரசியலும் செய்தார். விளம்பர மாடல் அரசு, கபடவேடதாரிகள் என ஒவ்வொரு அறிக்கையிலும் திமுகவை அட்டாக் செய்தனர்.

பரந்தூரில் விஜய்
தவெக விஜய் - பரந்தூர்

பரந்தூருக்கு நேரடியாக சென்று திமுகவுக்கு எதிராகப் பேசினார். இருநூறு தொகுதிகளில் வெல்வோம் என இறுமாப்போடு பேசுகிறார்கள் என ஸ்டாலினை நேரடியாக தாக்கிப் பேசினார். திமுகவுக்கு எதிராக இத்தனை வலுவாக பேசினாலும், பா.ஜ.கவுக்கு எதிராக கொஞ்சம் மெதுவாகவே வாள் வீசினார் விஜய். திருப்பரங்குன்றம் பிரச்சனையிலெல்லாம் வாயே திறக்காமல் இருந்தார். அதிமுகவை சீண்டவே இல்லை. இதெல்லாம் நிறைய யூகங்களுக்கு வழிவிட்டது. திமுக எதிர்ப்பை முன்னிறுத்தி அதிமுக, பா.ஜ.கவின் NDA கூட்டணிக்கு விஜய் செல்வார் என பேசப்பட்டது.

ஆனால், தவெக முகாமில் வேறு மாதிரியான மனநிலை இருந்தது. 'எங்களுக்கு யதார்த்தம் புரியும். நாங்கள் கூட்டணிக்கு தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், அதற்காக பா.ஜ.கவோடு கூட்டணி செல்லமாட்டோம். அதிமுகவோடு கூட்டணிக்கு செல்வதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால், அவர்கள் பா.ஜ.கவோடு நிற்கும் வரை அதற்கும் வாய்ப்பில்லை. அதிமுக - பா.ஜ.க கூட்டணி இப்படியே சுமூகமாக செல்லும் என நினைக்கவில்லை. டிசம்பரில் முக்கிய முடிவுகளை எடுப்போம்.' இதுதான் தவெகவின் முக்கிய நிர்வாகிகளின் மைண்ட் செட்டாக சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்தது.

விஜய்
விஜய்

'பா.ஜ.கவின் விருப்பம்!'

ஆனால், கடந்த சில நாட்களாக விஜய்யை நோக்கிய NDA கூட்டணிக்கான அழைப்புகள் அதிகமானது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமில்லாமல் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்திரராஜன் போன்றோரும் வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்தனர். அமித் ஷா கொடுத்த பேட்டியிலுமே விஜய் குறித்து நெகட்டிவ்வாக எதையுமே பேசவில்லை. 'இன்னும் நேரமிருக்கிறது. பொறுத்திருந்துப் பாருங்கள்.' என்றுதான் கூறியிருந்தார். இதெல்லாம் விஜய்யை NDA கூட்டணி பக்கமாக இழுப்பதற்கான வேலைகள் திரைமறைவில் வேகமாக நடக்கிறது என்ற தோற்றத்தை உண்டாக்கியது.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ் மோகன் என முக்கிய நிர்வாகிகளை வைத்து கொள்கை எதிரிகளோடு கூட்டணி இல்லை என பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பேச வைத்தனர். அப்படியிருந்தும், அந்த கூட்டணிப் பற்றிய பேச்சுகள் அடங்கவில்லை.

'விஜய் குறிவைக்கும் வாக்கு வங்கி!'

தவெக முகாம் மூன்று முக்கிய தரப்புகளை வாக்கு வங்கியாக குறிவைக்கிறது. தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் என இந்த மூன்று தரப்பையும் தங்களுடைய வலுவான வாக்கு வங்கியாக மாற்ற வேண்டும் என்றுதான் வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் திமுக கூட்டணியிடமே இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசே முழுப் பொறுப்பையும் கொண்டுள்ள, வக்ஃபு சட்டத் திருத்த மசோதா சம்பந்தமான பிரச்னையில் திமுகவை முதன்மை வில்லனாகக் காட்டி தொடர்ச்சியாக அறிக்கைகளையும் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினர்.

tvk vijay
tvk vijay

திமுகவின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தி தங்கள் பக்கமாக அதை மடைமாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் தவெகவின் திட்டம். அதனால்தான் பா.ஜ.கவின் NDA கூட்டணிக்கு தவெக செல்வதாக எழுந்த பேச்சை விஜய்க்கு வியூகம் வகுக்கும் தரப்பு ரசிக்கவில்லை. இதன்மூலம் தாங்கள் குறிவைக்கும் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் உண்டாகும் என நினைத்தனர். அதனால்தான் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி பா.ஜ.கவோடு என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தீர்மானமாக நிறைவேற்றியிருக்கின்றனர். அந்தத் தீர்மானத்தையும் விஜய்யே வாசித்து, 'நாங்கள் என்ன திமுகவா அதிமுகவா பா.ஜ.கவோடு கூட்டணி செல்ல?' எனக் கேள்வியும் கேட்டதன் மூலம் சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற முடியும் என வலுவாக நம்புகிறது பனையூர் தரப்பு.

'பூத் கமிட்டி பணிகள்...'

விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தனித் தீர்மானமாகவும் நிறைவேற்றியிருக்கின்றனர். ஆக, தங்கள் தலைமையை ஏற்று வரும் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இப்போது இருக்கின்றனர். அதற்கான வேலைகளையுமே தொடங்கியிருக்கின்றனர். செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மா.செக்கள் அத்தனை பேரும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழுள்ள தொகுதிகளின் பூத் கமிட்டிப் பொறுப்பாளர்களின் பட்டியலையும் எடுத்து வந்திருந்தனர்.

பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலோடு கூட்டத்துக்கு வந்த மா.செக்கள்
பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலோடு கூட்டத்துக்கு வந்த மா.செக்கள்

எந்தெந்த பூத்களில் எத்தனை வாக்குகள் இருக்கிறது? யாரை பூத் கமிட்டிப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள்? அவருடைய பின்னணி மற்றும் தொடர்பு விவரங்கள் என எல்லா டீடெய்ல்களும் அடங்கிய பட்டியலை மா.செக்கள் பொதுச்செயலாளர் ஆனந்திடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

முதற்கட்டமாக கோயம்புத்தூரில் நடத்தியதைப் போல, மேற்கொண்டு நான்கு மண்டலங்களில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர். அடுத்தக்கட்டமாக வேலூரில் வட மாவட்டங்களுக்கான பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடுகளைத் தொடங்கியிருந்தனர். அதற்குள்ளாகத்தான் ஆகஸ்ட்டில் மீண்டும் ஒரு மாநில மாநாட்டை நடத்தும் முடிவுக்கும் வந்ததால், வேலூர் கூட்டம் இப்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைத் தாண்டி தமிழகம் முழுவதும் பேசுபொருளாகும் வகையில் நிகழ்வுகளை நடத்த வேண்டும் என முடிவெடுத்துதான் மாநாட்டுக்கும் சுற்றுப்பயணத்துக்கும் திட்டமிட்டிருக்கின்றனர்.

'தவெக பூத் கமிட்டி சிக்கல்கள்!'

வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து அனைவரையும் பிரமிப்படைய செய்வோம் என கட்சியின் இரண்டாமாண்டு தொடக்க விழாவில் விஜய் பேசியிருந்தார். அவர் பேசியே நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், களத்தில் யதார்த்தம் வேறாக இருக்கிறது. 69000 பூத்களுக்கு பூத்துக்கு தலா ஒரு பொறுப்பாளர் என 69000 பொறுப்பாளர்களை மட்டும்தான் மா.செக்கள் நியமித்திருக்கிறார்கள்.

பூத் கமிட்டி பட்டியலோடு நிர்வாகிகள்
பூத் கமிட்டி பட்டியலோடு நிர்வாகிகள்

அந்தப் பொறுப்பாளர்களுக்கு கீழ் 10 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டம். இதை மனதில் வைத்துதான் ஒவ்வொரு தெருவிலும் நம்முடைய நிர்வாகிகள் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்றும் செயற்குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு கீழ் 10 உறுப்பினர்களை நியமிக்கும் வேலையை பெரும்பாலான மா.செக்கள் இன்னும் செய்து முடிக்கவில்லை. தலைமையும் பூத் பொறுப்பாளர்களின் நியமனத்தை கவனிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனத்திலுமே சில மா.செக்கள் அவசர அடி அடித்திருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் களத்தில் திமுக, அதிமுகவுடன் போட்டி போடுவது பெரும் சவாலாக மாறிவிடும் என சில நிர்வாகிகளே கவலை தெரிவிக்கின்றனர்.

'வீடு வீடாக சேகரிக்கப்படும் ரிப்போர்ட்!'

செயற்குழுக் கூட்டத்தில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வேலையிலும் மா.செக்கள் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் 1 கோடி உறுப்பினர்களை செயலி மூலம் இணைத்துவிட்டோம் என தவெகவின் ஐ.டி.விங் மூலம் விளம்பரம் செய்திருந்தனர். ஆக, இன்னும் 1 கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அதற்காக சத்தமில்லாமல் ஒரு வேலையையும் செய்து கொண்டிருக்கின்றனர். 'ஓரணியில் தமிழ்நாடு' என திமுகவினர் வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பதை போன்ற ஒரு அசைன்மெண்டும் தவெக நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் குறைதீர் விண்ணப்பம்
மக்கள் குறைதீர் விண்ணப்பம்

'மக்கள் குறைதீர் விண்ணப்பம்' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களோடு, அந்தப் பகுதியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். கூடுதலாக 2026 இல் மாற்றம் வர வேண்டும் என விரும்புகிறீர்களா என்ற கேள்வியையும் கேட்கிறார்கள். அதற்கு மக்களின் பதில் என்னவோ அதையும் குறித்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மக்களின் தற்போதைய மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் என நினைக்கின்றனர்.

இன்னும் 10-15 நாட்களுக்குள் எவ்வளவு மக்களை சந்திக்க முடியுமோ சந்தித்து அந்தப் பட்டியலை தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவுப் பிறப்பித்திருக்கின்றனர். இந்தப் பணியிலும் தலைமையிடம் நல்லப் பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக அவசர அடி அடித்து வேக வேகமாக பட்டியலை ஒப்படைக்கும் வேலைகளில் சில மா.செக்கள் இறங்கியிருக்கின்றனர்.

விஜய்
விஜய்

'கூட்டணிக் கணக்குகள்!'

எங்கள் தலைமையில்தான் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். விஜய்க்கு வட மாவட்டங்களில் தலித் இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக தவெக தரப்பு நம்புகிறது. அதனால், விசிக தங்கள் பக்கம் வந்தால் வட மாவட்டங்களில் நிறைய தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிற விருப்பமும் தவெகவுக்கு இருக்கிறது. அதனால்தான் மாநாட்டிலிருந்தே 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என பெரிய தூண்டிலை விஜய் விரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், திருமா இன்னும் பிடிகொடுக்கவில்லை. அவ்வபோது திமுகவை விமர்சித்தாலும், திமுகவும் நாங்களும் கொள்கைக் கூட்டணியில் இருக்கிறோம் என விரிசலை உடனடியாக பூசி விடவும் செய்கிறார்.

ஆக, விஜய்யை நம்பி எந்தக் கட்சி வரப்போகிறது என்பதே பெரிய கேள்விக்குறிதான். இப்போதைக்கு முஸ்தபாவின் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே விஜய்யோடு இருக்கிறார்கள். விஜய் பிறந்தநாளுக்கு பனையூர் வாசலில் போஸ்டர் அடித்த கையோடு 3-5 தொகுதிகளை தாங்கள் எதிர்பார்ப்பதாக தவெக தலைமையிடம் விருப்பமும் தெரிவித்திருக்கின்றனராம்.

விஜய்
விஜய்

1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு, திமுகவும் அதிமுகவுமே இங்கே மாறி மாறி ஆட்சியமைத்திருக்கின்றன. மூன்றாவதாக ஒரு அணியை கட்டமைத்த யாருடைய கனவும் இங்கே பலித்ததில்லை. இதோ விஜய் இப்போது தன்னை ஒரு மாற்று சக்தியாக முன்னிறுத்தி மூன்றாவது அணியை கட்டமைக்கும் வேலையில் இறங்கப்போவதாக சொல்கிறார். இமயமலையை முதுகில் கட்டி இழுக்கும் சவால் இது. விஜய் என்னவாகப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” - ஜான் பாண்டியன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முத... மேலும் பார்க்க

Armstrong: "அண்ணனுக்கு இந்த அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது"- நினைவேந்தல் கூட்டத்தில் பா.ரஞ்சித்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இ... மேலும் பார்க்க

'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' - சந்தேக தொனியில் திருமா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசி... மேலும் பார்க்க

Armstrong: 'மக்கள் மனதில் அன்பையும் அறிவையும் விதைத்தது நம்ம ஆம்ஸ்ட்ராங்'- நயினார் நாகேந்திரன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங்இதில்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி Vs வேலுமணி; 2026 தேர்தலில் கோவை மாவட்டத்தை கைப்பற்றுவது யார்? அனல் பறக்கும் வியூகம்

2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை, தெருமுனை பிரசாரங்களை தொடங்கிவிட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க

`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்... மேலும் பார்க்க