Armstrong: "அண்ணனுக்கு இந்த அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது"- நினைவேந்தல் கூட்டத்தில் பா.ரஞ்சித்
கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய அவர், ‘அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

உண்மையிலேயே இந்த ஒரு வருட காலம் நிறைய விஷயங்களை நாம் சந்திக்க வேண்டி இருந்தது. அதில் மகிழ்ச்சியானத் தருணங்களும் இருந்தது, வருத்தமான தருணங்களும் இருந்தது. அவர் இல்லாத இந்தப் பொழுதுகளை நிறைய முறை நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
அண்ணனுக்கு இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடாது. அந்த அசம்பாவிதம் நமக்கு அருகிலேயே நடந்திருக்கிறது. ஏன் இதைக் கவனிக்காமல் விட்டோம் என்ற கேள்வியும், அச்சமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

அண்ணன் இல்லாத பெரும் துயரத்தைக் கடந்து வருவதற்குள் அவருடையக் கொள்கை வழியில் அவர் விரும்பிய சமத்துவத்தை உருவாக்க அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் துணைவியார் களமிறங்கி இருக்கிறார். அவரின் நீண்ட நெடிய வழியில் செயல்படுவார்” என்று பேசியிருக்கிறார்.