Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” - ஜான் பாண்டியன்
கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது.
ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முதலாமாண்டு நினைவு நாளில் அவரின் மனைவி பொற்கொடி, `தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய அவர், “எனக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 40 ஆண்டுகால உறவு இருக்கிறது. என்னுடைய குழந்தைகளை ஆம்ஸ்ட்ராங் கடைக்கு தூக்கிச் செல்வார். அப்பேற்பட்ட உறவுதான் எங்களுடையது. சமுதாய மக்களுக்காக உழைக்கும் செல்வந்தனை இறப்பு நிகழ்ச்சியில் பார்க்கும்போது நாங்கள் வருத்தப்படுகிறோம்.
அவருடைய உடலில் வெட்டப்பட்ட காயங்கள் எல்லாம் ரத்தமாக சிதறினாலும் கூட நம்மை திரட்டி... நான் சாகவில்லை. இன்னும் உங்களில் ஒருவனாக இருக்கிறேன் என்பதைத்தான் மனதிலே நினைக்கத் தோன்றுகிறது. என்னுடைய கணவன் பணியை நானும் மேற்கொள்வேன் என்று பொற்கொடி களமிறங்கி இருக்கிறார்.

அது சாதாரண விஷயம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களை எப்படியாவது வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது. ஆம்ஸ்ட்ராங் விட்ட பணியைப் பொற்கொடித் தொடரட்டும்” என்று பேசியிருக்கிறார்.