நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்
மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு.
இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக மும்பையில் மிகப் பெரிய பேரணியை நடத்துவோம் என அறிவித்தனர்.
சிவசேனா கட்சியிலிருந்து ராஜ் தாக்கரே பிரிந்து சென்ற 20 ஆண்டுகளாக இருவரும் இணையாத சூழலில், இந்த பிரச்னையில் இருவரும் இணைந்து குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பாஜக அரசு உத்தரவை திரும்பப் பெற்றது.
இன்று மராத்தி ஒற்றுமையின் வெற்றி என்ற மாநாட்டில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து கலந்துகொண்டனர்.
இந்த சம்பவங்களை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பதிவு
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.

இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்ரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் ராஜ் தாக்ரே அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!
இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்!
தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!