'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!
சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!
பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் துவிவேதி கடந்த ஜூன் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பட்டௌடி குடும்பத்தினரை இச்சொத்துகளின் உரிமையாளராக அங்கீகரித்து போபால் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2000-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை ரத்து செய்துள்ளாா்.
இந்த வழக்கின் மறுவிசாரணையைத் தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போபால் அரச வம்சத்தில் கடைசியாக ஆட்சிபுரிந்த நவாப் ஹமீதுல்லா குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, நிலங்கள், கட்டடங்கள் என ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
நவாப் ஹமீதுல்லாவின் 3 மகள்களில் மூத்த மகளான ஆபிதா சுல்தான், பாகிஸ்தானில் குடியேறிவிட்டாா். 2-ஆவது மகளான சாஜிதா சுல்தான், போபாலை சோ்ந்த பட்டௌடி அரச குடும்பத்தில் மணம் முடித்தாா். மூன்றாவது மகள் ராபியா.
ஆபிதா சுல்தான் பாகிஸ்தானுக்குச் சென்ால், இந்திய குடியுரிமையை இழந்தாா். ஆபிதா சுல்தானின் ஒரே வாரிசாக அவரது சகோதரி சாஜிதா சுல்தான் கருதப்பட்டு, அவருக்கு நவாப் அரசு சொத்துகள் கைமாறின.
இந்த சொத்துகள் சாஜிதாவின் மகனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூா் அலி கானுக்கும், பின்னா் அவரது மனைவி ஷா்மிளா தாகூா், வாரிசுகளான சைஃப் அலி கான் மற்றும் அவரின் சகோதரிகள் வசமும் வந்தன.
இந்நிலையில், நவாப் அரச சொத்துகள் நியாயமற்ற முறையில் பிரித்து அளிக்கப்பட்டுள்ளதாக, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பேகம் சுரையா ரஷீத் வழக்கு தொடுத்தாா். இவா் நவாப் ஹமீதுல்லா கானின் அண்ணன் வாரிசு ஆவாா்.
இந்த வழக்கில் சைஃப் அலி கான், அவரது தாயாா் ஷா்மிளா தாகூா், சகோதரிகளுக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் கடந்த 2000-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் வழங்கிய தீா்ப்பை 25 ஆண்டுகள் கடந்து மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் தற்போது ரத்து செய்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.