மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்
ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் பெண் காவலர்களைச் தனியாக சந்தித்துப் பேசிய 6 - ம் வகுப்பு மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் தங்களிடம் உடல்ரீதியாக தொடர்ந்து அத்துமீறி வருவதாக புகார் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தியதில், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் 21 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்துள்ளனர். உடனடியாக அவர்மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த கொடூரம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். கோத்தகிரியைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில்குமார் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் செந்தில்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கேள்விப்பட்டும் பள்ளியில் சிலர் அலட்சியமாக மூடி மறைத்து வந்திருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருப்பதால் அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.