மொஹரம் பண்டிகை: ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? உண்மை என்ன??
Custodial Death: `நிகிதாவின் புகார் முதல் சிகரெட் சூடு வரை’ - அஜித்குமார் மரண வழக்கில் நடந்தது என்ன?
தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இதுவரை அஜித் குமார் வழக்கில் என்னவெல்லாம் நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜூன் 27 -நிகிதாபுகார்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்27) சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த முனைவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜூன் 28 -அஜித் குமார் மரணம்:
திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித்குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
சனிக்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 6 மணி அளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாட்டுத் தொழுவத்தில் இருந்து அஜித்தை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அஜித் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
போராட்டம்:
திருப்புவனம் காவல் நிலையத்தை அஜித்குமாரின் உறவினர்களும், மடப்புரம் கிராம மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அஜித்குமார் உயிரிழந்துவிட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார். இதனால் பதற்றம் அதிகரித்ததால் திருப்புவனம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

ஜூன் 29 - அரசியல் தலைவர்கள் கண்டனம்:
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க):
"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
அன்புமணி (பா.ம.க)
மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
நயினார் நாகேந்திரன் (பாஜக):
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது
சீமான் (நாம் தமிழர் கட்சி):
தி.மு.க ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.

காவல்துறையின் எஃப்.ஐ.ஆர்
இந்த வழக்கு விசாரணையின் போது எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை என்றத் தகவல் வெளியாகி பரபரப்பானதும், காவல்துறை எஃப்.ஐ.ஆர் காபியை வெளியிட்டது. அதில், ``அஜித்குமார் தன்னுடைய தம்பியிடம் திருடிய நகைகளைக் கொடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார். அஜித்குமாரின் நண்பர்கள் பிரலின் மற்றும் வினோத் ஆகியோரை விசாரித்தபோது, 'அஜித்குமார் தான் திருட்டைச் செய்திருப்பார்' எனக் கூறியுள்ளனர்.
பின்னர், அஜித்குமார் உண்மையை ஒப்புக் கொண்டு நகையைத் திருடியதாகவும், திருடிய நகையை திருப்புவனம் மடப்புரம் கோவில் அலுவலகம் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் ஒளித்து வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அங்குச் சென்று நகைகளைத் தேடியபோது கிடைக்கவில்லை." - என அஜித் குமாரை திருடனாக குறிப்பிட்டிருந்தது.
தடுக்கி விழுந்து..:
எஃப்ஐஆர்-ன் மற்றொரு பகுதியில், ``திருப்புவனம் மடப்புரம் கோவில் அலுவலகம் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையிலிருந்து அவர் போலிஸாரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தில், ஓடிய போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். மீண்டும் அவரைப் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கும் போது, அஜித்குமார் மீண்டும் தப்பி ஓடி கீழே விழுந்திருக்கிறார்.
அவருக்கு வலிப்பு வந்துள்ளது. இதனையடுத்து, திருப்புவனம் மருத்துவமனைக்கு, பின்னர், சிவகங்கை மருத்துவமனைகக்கு கொண்டு சென்றபோது மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கூறினார்கள். அங்கே, இரவு சுமார் 11.15 மணிக்கு, மருத்துவர் பரிசோதித்து விட்டு, அஜித்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி நேரில் ஆய்வு:
அஜித் உயிரிழந்தது தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) திருப்புவனம் காவல் நிலையத்திலும், மடப்புரம் கோவில் மாட்டுத்தொழுவத்திலும் நேரில் சென்ற நீதிபதி வேங்கட பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அன்று இரவே, அஜித் குமாரின் குடும்பத்தினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
முதல் கட்ட நடவடிக்கையாக, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
(ஜூன் 30) - முதற்கட்ட பிரேத பரிசோதனை:
முதற்கட்ட பிரதே பரிசோதனையில் அஜித் குமாரின் மீது இருந்த காயங்கள் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும், இதில் தொடர்புடைய 6 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
உடல் தகனம்:
உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்று தகனம் செய்தனர்.

(ஜூன் 1) - வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்:
'விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவித்திருந்தார்.
நீதிமன்ற தலையீடு:
இந்த வழக்கை தானாக முன்வந்து ஏற்ற உயர் நீதிமன்றம், இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய உத்தரவிட்டது. மேலும், நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையிலான குழு வழக்கின் முதற்கட்ட இடைக்கால அறிக்கையை ஜூலை 8‑க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டது. இவரிடம் இதுவரை கிடைத்த சான்றுகள், CCTV, FIR உள்ளிட்டவை ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
நீதிபதிகளின் கோபம்:
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி,``அஜித்குமார் உடலில் 44 காயங்கள் உள்ளன என்றால், எதை வைத்து அடித்தனர். காவல்துறையின் செயல் குறித்தே கேள்வி எழுகையில், என்ன செய்வது... காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை அதன் சி.சி.டி.வி. காட்சிகள் இல்லை. 'அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது".

கல்வியறிவு அதிகம் உள்ள தமிழகத்தில் இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கது. அஜித்தின் பிறப்புறுப்பிலும், வாய், காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது, அஜித் குமாரை கோசாலையில் வைத்து கடினமாக தாக்கியுள்ளனர், பல இடங்களுக்கு கொண்டு சென்றும் தனிப்பிரிவு போலீசார் தாக்கியுள்ளனர். மேலும், 50 லட்சம் இழப்பீடு, அஜித் தம்பிக்கு கோயிலில் பணி வழங்கப்படும் என அஜித் குமார் குடும்பத்திடம் பேரம் பேசி உள்ளனர்"
(ஜூலை 2) மாநில அரசின் நிவாரணம்:
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வழியே பேசி ஆறுதல் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டார். அதே தினம், தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அஜித் குமார் குடும்பத்திடம் ரூ5 லட்சமும், அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலையும், வீட்டுப் பட்டாவும் வழங்கப்பட்டது.

ஆதார வீடியோ... அதிர்ச்சி:
அஜித் குமார் லத்திகளாலும், பைப்பாலும் தாக்கப்படும் காட்சி அஜித் குமாரின் நண்பன் சக்தீஸ்வரன் என்பவர் வீடியோ பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. பலரும் காவல்துறையினரை கடுமையாக விமர்சித்தனர்.
விசாரணைக் குழுவின் நடவடிக்கை:
மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலைய அருகே நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு ஆஜராக DSP சுகுமாறன், ஆய்வாளர் ரமேஷ்குமார், கோயில் பணியாளர் சக்தீஸ்வரன் (வீடியோ எடுத்தவர்) உள்ளிட்ட முக்கியமானவர்களிடம் சுமார் 2.5 மணி நேரம் விசாரித்தார்.
மிரட்டப்பட்ட சாட்சி:
அஜித் குமார் காவலர்களால் கடுமையாக தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், 'என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' என தமிழ்நாடு DGP‑க்கு 2 பாதுகாப்பு கோரிக்கை மனு சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு காவலர்களின் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மனித உரிமை ஆணையம்:
மாநில மனித உரிமை ஆணையம் நகை திருட்டு வழக்கில் அஜித் மீது நடந்த கொடுமையைக் குறித்து விளக்கமளித்து, 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என DGP‑விடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிகிதா:
இதற்கிடையில், கோயில் சக்கர நாற்காலி இயக்குவதற்காக அஜித் குமார் ரூ.500 கேட்டதாகவும், அதனால், முனைவர் நிகிதாவுக்கும் கோயில் காவலாளி அஜித்குமாருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் முனைவர் நிகிதாவின் ஈகோவால்தான் அவர் புகார் அளித்தார் என்றும் செய்திகள் வெளியானது.
மேலும், அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கெனவே பண மோசடி புகார்கள் இருப்பதாகவும், அவர் தலைமைச் செயலக அதிகாரி முதல் காவல்துறை உயர்மட்ட அதிகாரி வரை ஆதரவு பெற்றவர் என்ற தகவலும் வெளியாகி சமூக ஊடகம் கொந்தளித்தது. தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
திருமாவளவன் கண்டனம்:
அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. காவல்துறையில் முரட்டுத்தனமான போக்கு நீடிப்பது வேதனை அளிக்கிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.
(ஜூலை 3) - பிரேத பரிசோதனை முடிவு:
அஜித்குமாரின் உடலில் சுமார் 50 வெளிப்புற காயங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 12 சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு (கன்றிய காயங்கள்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காயங்கள் வெறும் வெளிப்படையான காயங்கள் அல்ல. ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

வயிற்றின் நடுவே கம்பியால் குத்தப்பட்டும், தலையில் (கபாலத்தில்) கம்பியால் அடிக்கப்பட்டதால், மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இது மரணத்திற்கான முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். சிகரெட் சூட்டால் எரித்துச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறது என அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது.
நேற்றும் நீதிமன்ற விசாரணைக் குழு மடப்புரத்தில் விசாரணையில் ஈடுபட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த வழக்கு குறித்து பேசி வருகின்றனர். தவெக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் இது குறித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டது குறிப்பிடதக்கது.