ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா பகுதியில் அதிகாலையில் சுரங்க விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக நிர்வாகக் குழு சென்றடைந்தனர்.
மீட்பு நடவடிக்கையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, சுரங்க விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக குஜு காவல் நிலைய பொறுப்பாளர் அசுதோஷ் குமார் சிங் தெரிவித்தார்.
கிராமத்தில் உள்ளவர்கள் சிலர் அந்த இடத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
ராம்கர் துணை ஆணையர் ஃபைஸ் அக் அகமது மும்தாஜ் சம்பவம் குறித்து காலையில் எங்களுக்குத் தகவல் கிடைத்ததாக தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினார். இந்த விவகாரத்தை விசாரிக்க நிர்வாகக் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.