இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்
Broadway Bus Stand: இடம் மாறும் பிராட்வே பஸ் ஸ்டாண்ட்; ராயபுரத்தில் விறுவிறு பணிகள் - முழு விவரம்!
சென்னை பிராட்வேயில் இயங்கி வந்த பேருந்து நிறுத்தத்தை நவீனமாக்கப்பட்ட பல்நோக்கு போக்குவரத்து வளாகமாக மாற்றயிருப்பதால், ராயபுரத்தின் மேம்பாலத்திற்கு அருகில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் ரூ.7.5 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
தற்போதைக்கு வடசென்னையில் இருக்கும் பெரிய பேருந்து நிலையமென்று சொல்லும் அளவிற்கு இப்பேருந்து நிலையத்தில் சுமார் 60 பேருந்துகள் வரை ஒரே சமயத்தில் நிறுத்த முடியும்.
இப்பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைந்த கழிவறைகள், மழைநீர் சேகரிப்புத் திட்டம், பயணிகளுக்கான இருக்கை வசதி, பயணிகளுக்கான காத்திருப்போர் அறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, முதலுதவி அறையென பிராட்வே நிலையத்தைக்காட்டிலும் அனைத்து வசதிகளும் கொண்டு கட்டப்பட்டுவரும் இப்பேருந்து நிலையத்தில் 90% வேலை முடிந்திருக்கிறது.



மேலும், பேருந்து நிலையத்தில் ஆவின் கடையை தவிர்த்து மற்ற கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. காரணம், பிராட்வே பேருந்து நிலையத்தின் பணிகள் மூன்று வருடத்தில் நிறைவடைந்துவிடும் என்பதால் இந்த இடம் மூன்று வருடத்திற்கு மட்டுமே குத்தகை எடுக்கப்பட்டுள்ளது. தேவை இருப்பின் நீட்டிக்கப்படும் என்கிறார் ஏஇ அருண்.
பிராட்வேயில் இருந்து வரும் பேருந்துகள் சர்விஸ் ரோடு வழியாக பேருந்து நிலையத்தில் நுழையும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பேருந்துகள் ராயபுரம் மேம்பாலத்தை சுற்றிச்செல்லும், மேம்பாலத்தின் இறக்கத்தில் இருக்கும் வழியினை பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் வர பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்திற்கு, சென்னை சென்ட்ரல் வரும் பேருந்துகள், பிராட்வே வரும் பேருந்துகள் என தென்சென்னையில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் ராயபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும். ஒரு வேலை இடம் பற்றாது போனால் மிண்ட் பேருந்து நிலையத்திற்கு அவை மாற்றிவிடப்படும். மூலக்கடை, ராயபுரம் போன்ற வடசென்னையில் இருந்து புறப்படும் பேருந்துகள் அண்ணா சதுக்க பேருந்து நிலையத்திற்கும், விவேகானந்தர் இல்லம் பேருந்து நிலையத்திற்குமென இரண்டு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
ராயபுரம் பேருந்து நிலைய பணிகள் இந்த வார இறுதில் முடியும் நிலையில், அதிகாரிகளின் ஆய்வுக்குப்பிறகு விரைவில் பயன்பாட்டிற்கு வருமென்று எதிர்பாக்கப்படுகிறது.
- ரா.விசாலாட்சி