தென்காசி: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; 6 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது!
தென்காசி, கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான கஞ்சா கடத்தி வருவதாகவும் அல்லது மலைப்பகுதியில் விளைவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கிருந்து கடத்தி வரப்படும் கஞ்சா செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனை அடுத்து எல்லையோர மாவட்டங்களில் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த சுடலைமாடன் மற்றும் அய்யாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தற்போது செங்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி பகுதியை சேர்ந்த இவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டதா? இல்லையெனில் மலைப்பகுதிகளில் ஏதேனும் விளைவிக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.